Khamenei Vs Trump: அமெரிக்க ‘No Kings' போராட்டம்; “அவருக்கு திறமை இருந்தா...“ - ட்ரம்ப்பை கலாய்த்த காமேனி
அமெரிக்காவில், அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக ‘நோ கிங்ஸ்‘ போராட்டம் வெடித்த நிலையில், அதை சுட்டிக்காட்டியுள்ள ஈரான் தலைவர் காமேனி, ட்ரம்ப்பை விமர்சித்துள்ளார். அவர் என்ன கூறினார் தெரியுமா.?

கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் நடந்த "நோ கிங்ஸ்" போராட்டங்களில், பெரும் கூட்டம் வீதிகளில் இறங்கி, ட்ரம்பின் கடுமையான கொள்கைகள் மீது கோபத்தை வெளிப்படுத்தியது. அதே நேரத்தில், குடியரசுக் கட்சியினர் அவற்றை "அமெரிக்காவை வெறுக்கிறேன்" பேரணிகள் என்று கேலி செய்தனர். இந்நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்து பதிவிட்ட ஈரான் உச்ச தலைவர் காமேனி, ட்ரம்ப்பை திறமையில்லாதவர் என்ற பாணியில் விமர்சித்துள்ளார். அவர் கூறியது என்ன.? பார்க்கலாம்.
“அவருக்கு திறமை இருந்தா போராட்டத்த நிறுத்தனும்“
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றம், கல்வி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் 'ராஜாக்கள் இல்லை' என்று தலைப்பிடப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரை கேலி செய்துள்ளார். இந்த போராட்டங்கள் நாட்டை எதேச்சதிகாரத்தை நோக்கி தள்ளுவதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில், அமெரிக்க தலைவரின் 'திறன்கள்' குறித்து காமெனி சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அவர் திறமையானவராக இருந்தால், அமெரிக்காவில் அவருக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பை டிரம்ப் கட்டுப்படுத்த வேண்டும் என்று காமேனி கூறியுள்ளார்.
"அமெரிக்கா முழுவதும் பல்வேறு மாகாணங்களில் 7 மில்லியன் மக்கள் இந்த நபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் அந்த அளவுக்கு திறமையானவராக இருந்தால், அவர்களை அமைதிப்படுத்தி, அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்புங்கள், மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடாதீர்கள்" என்று ஈரானிய தலைவர் காமேனி பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் நடந்த 'நோ கிங்' போராட்டங்களின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
According to the reports, seven million people are chanting slogans against this individual in different states across America. If you’re that capable, calm them down, send them back to their residences, and don't interfere in the affairs of other countries! pic.twitter.com/zAkusSWdQf
— Khamenei.ir (@khamenei_ir) October 21, 2025
“அணுசக்தி நிலையங்களை அழித்ததாக ட்ரம்ப் கனவு கண்டுகொண்டே இருக்கட்டும்“
முன்னதாக, அமெரிக்காவிடமிருந்து வந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய குடியரசின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் கூற்றை அவர் மறுத்திருந்தார். ஈரானின் அணுசக்தி மையங்களை அழித்துவிட்டதாக ட்ரம்ப் கனவு கண்டுகொண்டே இருக்க வேண்டியதுதான் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
மேலும், எந்த நாடு அணுசக்தித் தொழிலைக் கொண்டிருக்க முடியும் என்று ஆணையிட அமெரிக்காவிற்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் காமெனி கேள்வி எழுப்பினார். "உலகில் நீங்கள் என்ன நிலைப்பாட்டை வகிக்கிறீர்கள்? ஈரானுக்கு அணுசக்தித் திறன்கள் மற்றும் அணுசக்தித் தொழில் உள்ளதா இல்லையா என்பது அமெரிக்காவின் வணிகத்தில் என்ன?" என்றும் அவர் கேட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இத்தகைய கருத்துக்களை தெரிவித்திருந்த அவர், தற்போது அமெரிக்காவின் ‘நோ கிங்ஸ்‘ போராட்டத்தை மையப்படுத்தி ட்ரம்ப்பை விமர்சித்துள்ளார். இதற்கு ட்ரம்ப் என்ன எதிர்வினை ஆற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















