பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது உறுதி என ஈரான் தலைவர் தெரிவித்துள்ளார். 


பள்ளி மாணவிகளுக்கு விஷம்


பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலை தந்து வரும் ஈரானில் மிக மோசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் நூற்றுக்கணக்கான பள்ளி படிக்கும் சிறுமிகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் விஷயம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. தெஹ்ரானின் கோமில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


தற்போது 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்த ஈரான் இணை அமைச்சர், "பெண்களின் கல்வியை முடக்கும் நோக்கத்துடன் புனித நகரமான கோமில் பள்ளி மாணவிகளுக்கு சிலர் விஷம் கொடுத்துள்ளனர்" என்றார். மேலும், ”கோமில் உள்ள பள்ளிகளில் சில மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளும், குறிப்பாக பெண்கள் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இது செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது" என்றார்.


மரண தண்டனை உறுதி


இந்நிலையில், ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”பள்ளி மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுத்தது மன்னிக்க முடியாது குற்றம் எனவும், குற்றவாளிகளுக்கு மரண தண்டணை உறுதி. அவர்கள் மீது துளியும் இரக்கம் காட்டப்படாது என்று தெரிவித்தார்.
 
இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, "கல்வி பயில்வதை தடை செய்வதற்காக மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது வெட்கக் கேடானது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது" என்று அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறினார்.


இதனிடையே பெண்களின் கல்வி உரிமையை பறிக்கும் நோக்கில் மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில் பெரும் போராட்டம் ஈரானில் வெடித்துள்ளது. தலைநகர் டெஹ்ரான் பகுதியில் மாணவிகள், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்:


இதுமட்டுமின்றி, உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினி என்ற இளம்பெண் சில நாட்களுக்கு முன்பு அடித்து கொல்லப்பட்டார். குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த 22 வயதான மாஷா அமினியை ஹிஜாப்பை சரியாக அணியவில்லை எனக் கூறி அவரை கைது செய்து அறநெறி காவல்துறையினர் கொடூரமாக தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர். காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார். 


இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இதனால், ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.