அணு ஆயுதம் தயாரிக்க முயற்சித்தாக குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்கா - ஈரான் இடையே நடந்து வரும் போர் ஒட்டுமொத்த உலகையும் மிக கடுமையாக பாதித்துள்ளது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். 

பதவி விலகிய அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு தலைவர்:

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பெரும் பின்னடைவாக அமெரிக்க அரசின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவரான ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன், பதவி விலகலுக்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார். 

மனசாட்சி ஏற்கவில்லை:

அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது,  "ஆழ்ந்து சிந்தித்த பிறகு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியிலிருந்து இன்று முதல் விலக முடிவு செய்துள்ளேன்.

ஈரானில் நடந்து வரும் போரை மனசாட்சி உறுத்தாமல் என்னால் ஆதரிக்க முடியாது. ஈரான் நமது நாட்டிற்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. மேலும் இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க ஆதரவுக் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகிறது."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

ட்ரம்பிற்கு நெருக்கடி:

தேசிய பயங்கரவாத அமைப்பின் தலைவரே ஈரான் உடனான போரை தனது மனசாட்சி ஆதரிக்கவில்லை என்று கூறியிருப்பது ட்ரம்பிற்கும், அவரது அரசுக்கும் பெரும் நெருக்கடியை அளித்துள்ளது. ட்ரம்ப் முதன்முறை அதிபராக பொறுப்பேற்றபோதே அமெரிக்காவில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கு கண்டனங்கள் குவிந்தது. 

இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றபோது வெளிநாட்டு விவகாரங்களில் அதிகளவு தலையிட்டதுடன், வரி விகிதங்களை உயர்த்தி உலக நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கவைத்தார். இதனால், அமெரிக்காவும் பாதிப்படைந்தது. 

கொல்லப்பட்ட அப்பாவிகள்:

இஸ்ரேல் - ஈரான் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கி தற்போது ஈரானை அமெரிக்கா துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. இதில் அந்த நாட்டின் உச்சபட்ச தலைவரான காமேனி கொல்லப்பட்டார். மேலும், பல ஈரான் தலைவர்கள், அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 

அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாத ஈரான் அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. துபாய் போன்ற பெரு நகரங்களில் நடந்த தாக்குதல்களில் பலரும் உயிரிழந்தனர். மேலும், இந்த போர் காரணமாக ஈரானில் இருந்து இந்தியா உள்பட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கிடைக்காத காரணத்தால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்து மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்த போர் காரணமாக அமெரிக்காவிலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜோ கென்ட்டின் இந்த பதவி விலகல் அதிபர் ட்ரம்பின் செல்வாக்கை பன்மடங்கு மக்கள் மத்தியில் குறைத்துள்ளது.