'சிறுத்தைகள் என் குழந்தைகள்போல' : உக்ரைனில் செல்லப்பிராணிகளை விட்டு வர மறுக்கும் இந்திய மருத்துவர்

உள்ளூர் விலங்கியல் பூங்காவில் ஒரு சிறுத்தை உடல் நலம் பாதித்து ஆதரவின்றி விடப்பட்டிருந்ததைப் பார்த்து விலங்கியல் பூங்கா அதிகாரிகளின் சம்மதத்தோடு அதை எடுத்து வந்து வளர்த்து வந்தார்.

Continues below advertisement

தான் வளர்த்து வரும் சிறுத்தைகளை உடன் எடுத்துச் செல்ல உக்ரைன் அதிகாரிகள் மறுப்பதால் அந்த நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார் இந்திய டாக்டர் ஒருவர். கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தியது. இரு நாடுகளிடையே நேற்று 6-வது நாளாக கடும் சண்டை நீடித்தது. பெலாரஸின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இருதரப்பும் இன்று 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்துவர, ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு மீட்புப் பணி மேற்கொண்டுள்ளது. மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். ஆனால் உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் இந்திய டாக்டரான கிரிகுமார் பாட்டீல். இவர் வெளியேற முடியாமல் தவிக்க காரணம் இவர் வளர்த்து வரும் இரு சிறுத்தைகள்தான்.

Continues below advertisement

இவர் இரண்டு சிறுத்தைகளுடன் டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள செவரோடோனட்ஸ்க் நகரில் வசித்து வருகிறார். அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் உள்ள பங்கரில் இவர் தற்போது அடைக்கலம் புகுந்துள்ளார். இவருடன் இவர் வளர்த்து வரும் சிறுத்தைகளும் கூண்டில் தங்கியுள்ளன. இவர் உள்ள பகுதியை உக்ரைன் பிரிவினைவாதிகள் சூழ்ந்துள்ளனர், தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உக்ரைனில் நிலைமை மோசமாகி வருவதால் அங்கிருந்து வெளிநாட்டினரும், உள்ளூர் மக்களும் வேகமாக வெளியேறி வருகின்றனர். ஆனால் தனது சிறுத்தைகளுடன் வெளியேற முடியாத நிலையில் உள்ளார் டாக்டர் பாட்டீல். இதுகுறித்து அவர் கூறுகையில், சிறுத்தைகளையும் கூட்டிக் கொண்டு செல்ல அதிகாரிகள் மறுக்கின்றனர். இவற்றை விட்டு விட்டுச் செல்லுமாறு அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இவை இரண்டும் எனது குழந்தைகள் போல. இவற்றை விட்டு விட்டு என்னால் எங்கும் போக முடியாது. எனது குடும்பம் என்னை சீக்கிரம் திரும்புமாறு வற்புறுத்தி வருகிறது. ஆனால் இவற்றை விட்டு விட்டுப் போக எனக்கு மனதில்லை. எனது கடைசி மூச்சு இருக்கும் வரை இவற்றை நான் பாதுகாப்பேன் என்று கூறுகிறார் பாட்டீல். பாட்டீல் 2007ம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றுள்ளார்.

பின்னர் டான்பாஸ் பகுதியில் செட்டிலாகி விட்டார். அங்குள்ள உள்ளூர் மருத்துவமனையில் மருத்துவராாகப் பணியாற்றி வருகிறார். உள்ளூர் விலங்கியல் பூங்காவில் ஒரு சிறுத்தை உடல் நலம் பாதித்து ஆதரவின்றி விடப்பட்டிருந்ததைப் பார்த்து விலங்கியல் பூங்கா அதிகாரிகளின் சம்மதத்தோடு அதை எடுத்து வந்து வளர்த்து வந்தார். அதற்கு யாஷா என்றும் பெயரிட்டார். 2 மாதங்களுக்குப் பிறகு இன்னொரு சிறுத்தையை கொண்டு வந்தார். அதற்கு சபரினா என்று பெயரிட்டார். ஆண் சிறுத்தைக்கு வயது 20 மாதங்களாகும். பெண் சிறுத்தையின் வயது 6 மாதமாகும். இரு சிறுத்தைகளும் பாட்டீலுடன் நன்றாகப் பழகுகின்றன. தற்போது அங்குமிங்குமாக குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடப்பதால் இரு சிறுத்தைகளும் அஞ்சி நடுங்குகின்றனவாம். சரியாக சாப்பிடுவதும் இல்லையாம். இப்படிப்பட்ட நிலையில் இவர்களை விட்டு விட்டு எப்படி நான் மட்டும் போவேன் என்று கேட்கிறார் பாட்டீல். இந்த சிறுத்தைகள் தவிர 3 இத்தாலிய வகை நாய்களையும் வளர்த்து வருகிறார் பாட்டீல். இவற்றுக்கு செலவிடத் தேவையான பணத்தை தனது யூடியூப் சானல் மூலம் இவர் சம்பாதிக்கிறாராம். பாட்டீலின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனுகு ஆகும். விரைவில் தனது சிறுத்தைகளை உடன் கொண்டு வர இந்திய அதிகாரிகள் அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பாட்டீல் காத்திருக்கிறார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola