துபாயில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறந்தவர்கள் தொடர்பாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது, மனதை உலுக்கும் அளவுக்கு அமைந்துள்ளது.


இறக்கும்போதும் மத நல்லிணக்கம்:


இறந்தவர்களில் ஒரு தம்பதி, அண்டை வீட்டு இஸ்லாமியர்களுக்காக இஃப்தார் விருந்து செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட பெரிய தீ விபத்து அவர்கள் இறப்பதற்கும் காரணமாக அமைந்தது. 


கேரளாவைச் சேர்ந்தவர் ரிஜேஷ் கலங்கடன். இவருக்கு வயது 38. இவரது மனைவி ஜெஷி கண்டமங்கலத் (32). இவர்கள் இருவரும் சனிக்கிழமை மாலை இந்துக்களின் அறுவடை பண்டிகையான விஷுவை முன்னிட்டு உணவு தயார் செய்து அதனை, நோன்பு இருந்த தங்கள் முஸ்லிம் அண்டை வீட்டாருக்கு அளிக்கவிருந்தனர்.


அப்போது, அவர்கள் வசித்து வந்த குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 16 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். கட்டிடத்தில் பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்காத காரணத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என துபாய் சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.


பயண, சுற்றுலா நிறுவனம் ஒன்றில் வணிக மேம்பாட்டு மேலாளராக ரிஜேஷ் கலங்காடன் பணிபுரிந்து வந்தார். அதே நேரத்தில், அவரது மனைவி கண்டமங்கலத் பள்ளி ஆசிரியராக இருந்தார்.


இஸ்லாமியர்களுக்காக இஃப்தார் விருந்து செய்யும்போது தீ விபத்து:


இந்த தம்பதியினர் சனிக்கிழமை அன்று விஷு பண்டிகையை கொண்டாடினர். வாழை இலையில் பரிமாறப்படும் சைவ விருந்தான விஷுசத்யாவைச் செய்து கொண்டிருந்தனர். இப்தார் விருந்துக்காக அவர்கள் கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர்களை அழைத்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் 409ஆம் அறையில் ஏழு பேருடன் வசித்து வந்தவர் ரியாஸ் கைகம்பம்.


406ஆம் அறையில் இந்து தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினர் தங்களுடன் நட்புறவுடன் இருந்ததாக ரியாஸ் கூறுகிறார். தம்பதிகள் தங்கள் பண்டிகைகளின் போது கைகம்பம் மற்றும் அவரது அறை தோழர்களை அழைப்பது வழக்கம்.


தம்பதியினர் குறித்து விரிவாக பேசிய ரியாஸ் கைகம்பம், "முன்பு ஓணம் மற்றும் விஷு மதிய உணவின் போது எங்களை அழைத்தார்கள். இந்த முறை ரம்ஜான் என்பதால் இப்தாருக்கு வரச் சொன்னார்கள். கடைசியாக தம்பதியரை அவர்களது குடியிருப்பின் வெளியே பார்த்தேன். ஆசிரியர் அழுது கொண்டிருந்ததை பார்த்தேன்.


பின்னர், அழைப்புகளுக்கு எந்த பதிலும் இல்லை. மதியம் 12.35 மணிக்கு, வாட்ஸ்அப்பில் ரிஜேஷின் ஸ்டேட்டஸை கடைசியாக பார்க்க முடிந்தது. ஞாயிற்றுக்கிழமைக்கான எனது விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய உதவியவர் ரிஷேஷ். என்னை இப்தாருக்கு அழைத்தவர் (அவரது மனைவியுடன்) மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்றார்.


கைகம்பத்துடன் ஒரே அறையில் வசிக்கும் சுஹைல் கோபா, இதுகுறித்து கூறுகையில், "அண்டை வீட்டாரை இழந்து தவிக்கிறோம். தினமும் சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொள்வோம். 16 அண்டை வீட்டாரை இழந்த அதே இடத்தில் வாழப் போவதை நினைத்தால் மனவேதனையாக இருக்கிறது" என்றார்.


விபத்து நடந்தபோது, கைகம்பம் மற்றும் சுஹைல் கோபா குடியிருப்பு வளாக்தில் இல்லை.