India-US Trade Deal: இந்தியப் பொருட்களுக்கு இனி 0% வரி.. நண்பருக்காக இறங்கிய டிரம்ப்.. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்
India-US Trade :இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக MSMEகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் அமெரிக்க பொருளாதாரத்தின் கதவுகளைத் திறக்கும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

அமெரிக்காவும் இந்தியாவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கையை இருநாடுகளும் வெளியிட்டுள்ளன. இந்த கட்டமைப்பை இந்தியாவும் அமெரிக்காவும் விரைவாக செயல்படுத்தி, இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்ய இணைந்து செயல்படும் என்று கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஓப்பந்தத்தின்படி அமெரிக்கா இந்திய தயாரிப்புகள் மீதான பரஸ்பர வரியை 18 சதவீதமாகக் குறைக்கிறது
25 வரியை உயர்த்திய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்கள் மீதான கூடுதலாக 25 சதவீத வரியை நீக்குவதாக அறிவித்தார். இதற்கு முன்னர் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா இந்த வரி உயர்வை டிரம்ப் விதித்தார். தற்போது இந்தியா அதிலிருந்து பின்வாங்கியுள்ளது. மேலும் இந்தியா மீதான வர்த்தக தடைகளை குறைத்து, அமெரிக்காவிலிருந்து எண்ணெய் உட்பட பிற பொருட்களை வாங்குவதை அதிகரிக்கும் என்று டிரம்ப் கூறினார்.
30 டிரில்லியன் டாலர் அமெரிக்க சந்தையை எட்டும்:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் விளைவாக இந்த கட்டமைப்பு உருவானதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக MSMEகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் அமெரிக்க பொருளாதாரத்தின் கதவுகளைத் திறக்கும் என்று அவர் கூறினார். இது ஏற்றுமதியை அதிகரிக்கும் மற்றும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மில்லியன் கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார்.
இந்த கட்டமைப்பின் கீழ், அமெரிக்கா இந்திய தயாரிப்புகள் மீதான பரஸ்பர வரியை 18 சதவீதமாகக் குறைக்கும். இது ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள், கரிம இரசாயனங்கள், வீட்டு அலங்காரம், கைவினைப்பொருட்கள் மற்றும் அமெரிக்க சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இயந்திரங்கள் போன்ற இந்தியத் துறைகளுக்கு கணிசமாக பயனளிக்கும். என்றார்.
0% வரி எத்ற்கெல்லாம்?
இந்த இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ், பொதுவான மருந்துகள், வைரங்கள் மற்றும் நகைகள் மற்றும் விமான பாகங்கள் உள்ளிட்ட பல இந்திய தயாரிப்புகளுக்கு வரிகளை முற்றிலுமாக பூஜ்ஜியமாக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்தும் மற்றும் மேக் இன் இந்தியா முயற்சிக்கு நேரடியாக பயனளிக்கும்.
விவசாயிகள் மற்றும் பால்வளத் துறைக்கு பாதுக்காப்பு:
இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகள் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களின் நலன்களை சமரசம் செய்யாது என்று பியூஷ் கோயல் தெளிவுபடுத்தினார். மக்காச்சோளம், கோதுமை, அரிசி, சோயாபீன்ஸ், கோழி, பால், சீஸ், எத்தனால், புகையிலை, சில காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்ற உணர்திறன் வாய்ந்த விவசாய மற்றும் பால் பொருட்கள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன என்றார்.
ஓப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
1. வர்த்தகம் மற்றும் வரிச் சலுகைகள்
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா வழங்கும் சலுகை: அமெரிக்காவின் அனைத்துத் தொழில் துறைப் பொருட்கள் மற்றும் உலர்ந்த டிஸ்டில்லர் தானியங்கள் (DDGs), கால்நடைத் தீவனத்திற்கான சிவப்பு சோளம், கொட்டை வகைகள் (Tree nuts), புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரி: ஜவுளி, ஆடை, தோல் பொருட்கள், காலணிகள், பிளாஸ்டிக், ரப்பர், கரிம வேதிப்பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட இந்தியப் பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும். இருப்பினும், இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்ததும், பொதுவான மருந்துகள் (Generic pharmaceuticals), ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் விமான உதிரிபாகங்கள் போன்ற பொருட்களுக்கான வரிகள் நீக்கப்படும்.
தேசிய பாதுகாப்பு மற்றும் பிற வரிகள்: எஃகு, அலுமினியம் மற்றும் தாமிரம் தொடர்பான பாதுகாப்பு வரிகளில் இருந்து சில இந்திய விமான உதிரிபாகங்களுக்கு விலக்கு அளிக்கப்படும். பதிலுக்கு, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்க, இந்திய வாகன உதிரிபாகங்களுக்கு முன்னுரிமை வரி ஒதுக்கீடு வழங்கப்படும்.
2. சந்தை அணுகல் மற்றும் தடைகளை நீக்குதல்
தரநிலைகள் மற்றும் தடைகள்: மருத்துவ உபகரணங்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பொருட்களுக்கான வர்த்தகத் தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், அமெரிக்கத் தரநிலைகள் மற்றும் சோதனைத் தேவைகளை ஏற்றுக்கொள்வது குறித்து ஆறு மாதங்களுக்குள் இந்தியா முடிவெடுக்கும்.
விதிமுறைகள்: ஒப்பந்தத்தின் பலன்கள் பிரதானமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கே கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் "தோற்ற விதிகள்" (Rules of Origin) உருவாக்கப்படும்.
3. பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் முதலீடு
மூன்றாம் நாடுகளின் சந்தையல்லாத கொள்கைகளை எதிர்கொள்ளவும், விநியோகச் சங்கிலி மீள்திறனை மேம்படுத்தவும் இரு நாடுகளும் ஒத்துழைக்கும்.
முதலீட்டு ஆய்வுகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
4. மாபெரும் கொள்முதல் மற்றும் தொழில்நுட்பம்
$500 பில்லியன் கொள்முதல்: அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து எரிசக்தி பொருட்கள், விமானங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்பப் பொருட்கள் மற்றும் கோக்கிங் நிலக்கரி ஆகியவற்றை 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கொள்முதல் செய்ய இந்தியா உத்தேசித்துள்ளது.
தொழில்நுட்ப ஒத்துழைப்பு: தரவு மையங்களில் (Data centers) பயன்படுத்தப்படும் கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (GPUs) உள்ளிட்ட தொழில்நுட்பப் பொருட்களின் வர்த்தகத்தை இரு நாடுகளும் கணிசமாக அதிகரிக்கும்.
5. டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் எதிர்காலம்
டிஜிட்டல் வர்த்தகத்தில் உள்ள பாரபட்சமான நடைமுறைகளை நீக்கவும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) ஒரு பகுதியாக வலுவான டிஜிட்டல் வர்த்தக விதிகளை உருவாக்கவும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
இந்தக் கட்டமைப்பை உடனடியாகச் செயல்படுத்தவும், இருதரப்புக்கும் லாபகரமான முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பணியாற்றும்.
























