சீன உளவு கப்பல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கையின் நிலையை இந்தியா புரிந்து கொள்ளும் என தெரிவித்திருக்கிறார். இந்தியா வந்துள்ள இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கையை இந்தியா புரிந்து கொள்ளும் எனக் கூறியுள்ளார்.
சீன உளவுக் கப்பலால் இந்தியா இலங்கை இடையில் அரசியல், பூகோள ரீதியிலான எந்த பிரச்சனையும் ஏற்படாது என அகமதாபாத்துக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இலங்கை ஒரு சிறிய நாடு எனவும், ஒவ்வொரு நாட்டுடனும் தாங்கள் நல்ல உறவைப் பேணி வருவதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
எங்களது நிலைமையை இந்தியா நிச்சயம் புரிந்து கொள்ளும் என கூறியுள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்தியா , இலங்கை இடையிலான தூதரக உறவுகள் சிறந்த முறையில் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையில் பல்வேறு துறைகளில் சீனர்கள் அதிகளவிலான முதலீடுகளைச் செய்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அதேபோல், கடந்த காலங்களில் இலங்கையின் தேவைகள் குறித்தும் அவர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு இருக்கும்போது இது ஒரு பெரிய ராஜதந்திர பிரச்சினை இல்லை என்று நம்புவதாகவும் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் உளவு கப்பலான 'யுவான் வாங் 5', இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 22 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்திருப்பதாகவே பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
அதேபோல் இலங்கையில் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் அகமதாபாத்தில் தெரிவித்திருக்கிறார். சீனாவின் இந்த உளவுக் கப்பலானது இரட்டை பயன்பாட்டுக்குரிய உளவுக் கப்பல் என இந்திய அதிகாரிகள் தரப்பில் தகவல் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமருடன் தொடர்பில் தான் இருப்பதாகவும், அதேபோல் இருநாட்டு வெளியுறவு துறையும் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாகவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் தெற்கு துறைமுகமான ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சீன கப்பல் ஆகஸ்ட் 22 வரை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன கப்பலை நிறுத்துவதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியது.
இந்து சமுத்திர பெருங்கடல் பகுதியிலும்,நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் மற்றும் கடல் சார்ந்த எந்த அறிவியல் ஆராய்ச்சியும் நடத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் 22 ம் தேதி வரை சீனக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது
குறித்த நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட சீன கப்பலானது, இந்து சமுத்திரப் பகுதியில் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கடல் பிராந்தியத்தின் தகவல்களை ,அந்த கப்பல் கண்காணிக்கும் என்ற ஒரு அச்சம் இந்தியாவிடம் இருந்து எழுந்திருப்பதாகவே சொல்லப்படுகிறது.
கடல் பிராந்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, அந்த துறைமுகத்தை சீனாவிடம் 99 வருட குத்தகைக்கு இலங்கை ஒப்படைத்தது தான் .
இல்லாவிட்டால் இந்து சமுத்திர பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளின் எதிர்ப்பையும் தாண்டி வருவதற்கு சீனா சற்று யோசித்து இருக்கலாம். இருந்தபோதிலும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பது சீன நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் அவர்களுக்கு அங்கு வந்து செல்வதற்கான உரிமையை பயன்படுத்திக் கொண்டதாகவே தெரிகிறது.
இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் அந்நாட்டு சுற்றுலாத்துறை தூதரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இந்தியாவின் வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்க சுற்றுலாத்துறை முக்கிய ஒரு வழியாகவே காணப்படுகிறது. ஆகவே அதனை ஊக்குவித்து அதன் மூலம் வருவாய் ஈட்டும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு இருக்கிறது.
அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் இலங்கைக்கான சுற்றுலாத்துறை தூதர் சனத் ஜெயசூர்யா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது இலங்கைக்கான சுற்றுலாத்துறை அலுவலகம் ஒன்று அகமதாபாத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு பகுதியாகவே இந்தியாவின் வட மாநிலங்களில் இராமாயண பாதை திட்டம் மற்றும் பல்வேறு சுற்றுலா அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின், குஜராத், அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் இலங்கையின் சுற்றுலாத் துறையின் நோக்கம் பற்றிய கருத்தரங்குகள் ,விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ,சுற்றுலா நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஊர்வலங்கள் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கான தூதர் மற்றும் சுற்றுலா துறை அமைச்சரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.