India Usa Trade: ரைட்டு..! வருகிறது ஒப்பந்தம்? ”அமெரிக்காவிற்கு திறந்து விடப்படும் இந்திய சந்தை” பணிந்தார் மோடி?
India Usa Trade: அமெரிக்க விவசாய பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்து விடுவதற்கு ஏதுவான, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாம்.

India Usa Trade: புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் மீது இந்திய பொருட்களின் மீது விதிக்கப்படும் ஏற்றுமதி வரி, 15 முதல் 16 சதவிகிதமாக குறையக்கூடுமாம்.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:
நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் உள்ள இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாம். அதன் மூலம் இந்திய பொருட்கள் மீது ட்ரம்ப் விதித்த ஏற்றுமதி வரி, 50 சதவிகிதத்திலிருந்து 15 முதல் 16 சதவிகிதம் ஆக குறையக் கூடும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் எரிசக்தி மற்றும் விவசாயத்தை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தால், ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் எண்ணெயின் அளவை இந்தியா குறைக்கக் கூடும் என Mint நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
”இந்திய சந்தையில் அமெரிக்க விவசாய பொருட்கள்”
அமெரிக்காவிலிருந்து மரபணு மாற்றப்படாத மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வதற்கான ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறதாம். அதே நேரத்தில் அதன் மீது விதிக்கப்படும் 15 சதவிகித வரியில் மாற்றம் இருக்காதாம். தற்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு 0.5 மில்லியன் டன் மக்காச் சோளத்தை அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கோழி தீவனம், பால் மற்றும் எத்தனால் துறைகளில் இருந்து அதிகரித்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை அதிகரிக்க இந்தியா முன்வந்துள்ளதாம்.
மனிதர்கள் மற்றும் கால்நடைகள் என இரு தரப்பு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக, மரபணு மாற்றப்படாத சோயாமீலை இறக்குமதி செய்வதை அனுமதிப்பது குறித்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். இதுதொடர்பான வரி சீர்திருத்தம் குறித்து எந்த தகவலும் இல்லாவிட்டாலும், இது அமெரிக்க குழுவின் முக்கிய கோரிக்கையாக உள்ளதாம்.
ரஷ்ய எண்ணெயை வெட்டி விடும் இந்தியா?
எரிசக்தியைப் பொறுத்தவரை, இந்தியா படிப்படியாக ரஷ்ய எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, அமெரிக்காவிலிருந்து எத்தனால் இறக்குமதியை அனுமதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, எரிசக்தி வர்த்தகத்தில் சில சலுகைகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவை நோக்கி கச்சா எண்ணெய் ஆதாரத்தை பன்முகப்படுத்த முறைசாரா முறையில் வழிநடத்தப்படலாம்.
ரஷ்யா வழங்கும் தள்ளுபடிகளை அமெரிக்கா இன்னும் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்கும் என்று அதிகாரிகள் மாஸ்கோவிடம் தெரிவித்துள்ளனராம். வர்த்தக ஒப்பந்தத்திற்கான முன்நிபந்தனையாக ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
ஒப்பந்தம் எப்போது இறுதியாகும்?
வரும் அக்டோபர் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைதொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும் சந்திப்பதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, இப்பந்தம் நடப்பாண்டு இறுதிக்கும் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
பணிந்தாரா பிரதமர் மோடி?
உள்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தியா எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளாது என பிரதமர் மோடி பேசி வருகிறார். அதோடு, குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டே, மலிவு விலையில் வழங்கும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருவதகாவும், வெளிநாடுகளின் அழுத்தத்தால் தங்களது எரிசக்தி துறை கொள்கைகள் மாற்றிக் கொள்ளப்படமாட்டாது எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து வருகிறது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அமெரிக்க விவசாய பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்து விடவும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது. இதனால், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரதமர் மோடி அடிபணிந்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைப்பதாக மோடி உறுதியளித்துள்ளார் என ட்ரம்ப் பேசி வந்தது உண்மையா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால், அவரது கருத்தினை இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.





















