Iran Hormuz: ஹார்மஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க ஈரான் அனுமதித்த நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹார்மஸ் முற்றிலுமாக மூடப்படவில்லை - ஈரான்
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ராஜாங்க நடவடிக்கைகள் மூலம் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றமாக, ஹார்மஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க 6 நாடுகளுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. அதில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பொதுவாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் விநியோகம் இந்த நீர்வழித்தடம் வாயிலாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கியதிலிருந்து மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரான் அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிடுவதை போன்று ஹார்மஸ் ஜலசந்தி முற்றிலுமாக மூடப்படவில்லை” என விளக்கமளித்துள்ளார்.
6 நாடுகளுக்கு அனுமதி அளித்த ஈரான்..
பேட்டியில் தொடர்ந்து பேசுகையில், “பல்வேறு கப்பல்களின் உரிமையாளர்கள் மற்றும் கப்பல்களை சொந்தமாக கொண்டுள்ள நாடுகள் எங்களை தொடர்புகொண்டு, ஹார்மஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரியுள்ளன. அதில் எங்களது நட்பு நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ சில கப்பல்களை எங்களது பாதுகாப்பு படை பத்திரமாக வழியனுப்பியுள்ளது. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக், வங்கதேசம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தொடர்பான கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்மஸ் பாதையை கடந்து சென்றதை செய்திகளில் பார்த்து இருப்பீர்கள். இந்த நாடுகள் எங்களுடன் பேசி, ஒருங்கிணைந்து செயல்பட்டன. இது எதிர்காலத்திலும் தொடரும், போருக்கு பிறகும் தொடரும்” என ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிரிகளுக்கு அனுமதி இல்லை - ஈரான்
தொடர்ந்து பேசுகையில், நெருக்கடிக்கு காரணமான அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சில வளைகுடா நாடுகளின் கப்பல்களுக்கு இந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்படாது என்றும் கூறினார். அதாவது "நாம் ஒரு போர்ச் சூழலில் இருக்கிறோம். இந்தப் பிராந்தியம் ஒரு போர் மண்டலமாகும். எதிரிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் கப்பல்களை இதன் வழியே செல்ல அனுமதிக்க எந்தக் காரணமும் இல்லை. ஆனால், இது மற்றவர்களுக்குத் திறந்தே இருக்கிறது" என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில், பாகிஸ்தானுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு கொள்கலன் கப்பலை ஹார்மஸ் ஜலசந்தியைக் கடக்கவிடாமல் ஈரான் தடுத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா துறைமுகத்திலிருந்து கராச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 'செலன்' என்ற அந்தக் கப்பலுக்கு, போக்குவரத்து அனுமதி இல்லாததால் தனது பாதையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரான் கட்டுப்பாட்டில் ஹார்மஸ் ஜலசந்தி
உரிய அனுமதி இன்றி பயணிக்கும் கப்பல்கள் மீதான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் ஈரான் ஜலசந்தி மீதான தனது கட்டுப்பாட்டை ஈரான் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. விமான நிறுவனங்கள் முதல் பல்பொருள் அங்காடிகள் மற்றும் டீக்கடை வரையிலான வணிகங்கள், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகள் உள்ளிட்ட சவால்களுடன் போராடி வருகின்றன. அதன் தாக்கம் கூடுதல் செலவாக பொதுமக்கள் தலையில் விழதொடங்கியுள்ளன.
