பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது இன்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.


பாகிஸ்தான் நாட்டின் ஆளும் கட்சியான முஸ்லீம் லீக் நவாஸ் , அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணியை, பிடிஐ கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் நடத்திய நிலையில், அவர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது.


இந்நிகழ்வில் இம்ரான் கான் உள்பட மொத்தம் 15 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில், 70 வயது நிரம்பிய இம்ரான் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், அவரது கால்களில் குண்டு துளைத்துள்ளதாகவும், இம்ரான் கான் தற்போது லாகூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இச்சம்பவத்தில் ஈடுபட்ட நவீத் எனும் நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், அதனால் தான் அவரைக் கொலை செய்ய வந்ததாகவும் அந்நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


 






 






முன்னதாக பாகிஸ்தான்  குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஆகியோர் இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவமும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.