பாகிஸ்தான் குஜ்ரன்வாலாவில் கடந்த 3-ந் தேதி அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இம்ரான் கானின் வலது காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குஜ்ரன்வாலாவில் உள்ள அல்லா வாலா சவுக்கில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற நிலையில், இம்ரான் கான் உள்ளிட்ட அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காயமடைந்தனர். பி.டி.ஐ. கட்சியைச் சேர்ந்த இம்ரான்கான் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பேரணியில் அவருடன் பலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இம்ரான் கான் சென்ற கண்டெய்னர் வாகனத்துக்கு அருகில் வந்த நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து விரைந்து இம்ரான் கானின் காவலர்கள் அவரை பாதுகாப்பு வளைத்துக்குள் கொண்டுவந்தனர். துப்பாக்கிச்சூடு நிகழ்த்தி நவீத் எனும் நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், அதனால் தான் அவரைக் கொலை செய்ய வந்ததாகவும் அந்நபர் வாக்குமூலம் அளித்திருந்தார். இம்ரான் கான் பேரணி நடைபெற்ற இடத்தில் இருந்து காலில் கட்டுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்ததோடு, இம்ரான் கான் விரைவில் நலம் பெற விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, நாட்டு மக்களிடம் உரையாற்றிய இம்ரான் கான், தன்னைக் கொல்ல நான்கு பேர் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறினார். மேலும், தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் வீடியோ வெளியிடப்படும் என்றும் எச்சரித்திருந்தார். பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உள்பட மூன்று பேர் மீது இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் (PEMRA) இம்ரான் கானின் உரைகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை ஒளிபரப்புவதற்கும் மறு ஒளிபரப்புவதற்கும் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் தடை விதித்துள்ளது. தன்னை படுகொலை செய்ய இம்ரான் கானே தூண்டியதாக ஒழுங்குமுறை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.