இஸ்ரேல் அரசு லெபனான் மீதான போர் நிறுத்தத்தை கொண்டு வந்ததை அடுத்து ஹார்மூஸ் நீரிணையை திறக்க ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அனைத்து நாட்டு கப்பல்களும் ஹார்மூஸ் நீரிணையை எந்த வித சிரமின்றி கடக்கலாம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்மூஸ் நீரிணை திறப்பு
இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளதாவது லெபனானில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ள ஒருங்கிணைந்த வழித்தடத்தில், இந்த போர்நிறுத்தக் காலம் முழுவதும் கப்பல்கள் தடையின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி சொன்ன டிரம்ப்:
ஈரான் ஹார்மூஸை திறந்த சிறிது நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், "ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாகத் திறக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்திற்குத் தயாராக உள்ளதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும் தமது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் இது குறித்து பதிவிட்ட ட்ரம்ப், "மிக்க நன்றி!" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரு அறிவிப்புகளும் ஹார்முஸ் நீரிணை நெருக்கடிக்கு ஒரு நேர்மறையான தீர்வு கிடைத்துள்ளதை உணர்த்துகின்றன. மேலும், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கான ஒரு சாதகமான தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது.
லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம்
அமெரிக்கா - ஈரான் இடையேயான இடைக்கால போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஆன பிறகும் கூட, ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைப்பதாக கூறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் 10 நாட்களுக்கு இடைக்கால போர் நிறுத்தம் மேற்கொள்ள இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது. அமெரிக்கா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் இடம்பெற வேண்டும் என ஈரான் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
பின்னணி என்ன?
லெபனானில் நிலவும் தற்காலிக அமைதிச் சூழலைத் தொடர்ந்து, சர்வதேச கடல்சார் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது. உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில், கப்பல் போக்குவரத்தை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
