Modi Putin Xi: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் மகிழ்ச்சியாக கலந்துரையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மோடி, புதின், ஜி சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்காக சீனாவின் தியான்ஜினில் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் கூடியுள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கைகுலுக்கி கட்டிப்பிடித்து மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இன்று மாலை இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ள இரு தலைவர்களும், ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்த பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
வீடியோ வைரல்:
சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிரதமர் மோடி, புதின் மற்றும் ஜி ஜிங்பிங் ஆகியோர் கைகளை குலுக்கியபடி ஒருவரை கட்டிப்பிடித்து, சிரித்தபடி பேசி மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மூன்று தலைவர்களும் சிரித்துக்கொண்டே உரையாடும் படங்கள், 2018 ஆம் ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட இதேபோன்ற புகைப்படத்தை நினைவூட்டுகின்றன. அமெரிக்காவுடனான இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவின் சொந்த உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மூன்று தலைவர்களுக்கும் இடையிலான நட்புரீதியான தொடர்புகள் அதிகரித்து வருவது சர்வதேச சந்தையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முக்கிய பேச்சுவார்த்தை
ஷாங்காய் ஒத்துழைப்பு ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி, ஜி ஜின்பிங்குடன் 50 நிமிடங்களுக்கும் மேலாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தலைவர்களும் தங்கள் எல்லை வேறுபாடுகளைத் தீர்த்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக உறுதியளித்தனர். தனது தொடக்க உரையில், இந்தியா-சீனா உறவுகளை பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் அடிப்படையில்" முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு "உறுதியுடன்" இருப்பதாக பிரதமர் மோடி, கூறினார்.
கடுப்பில் ட்ரம்ப்
உலகின் சக்தி வாய்ந்த தலைவராக தன்னை முன்னிலைப்படுத்துவதில் ட்ரம்ப் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒருபகுதியாக உக்ரைன் போரை நிறுத்துவதற்காக, இந்தியா மீது 50 சதவிகிதம் வரி விதித்து மிரட்டி வருகிறார். இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் எற்பட்டுள்ளது. அதேபோன்று, அமெரிக்காவின் நடவடிக்கையால் சீனா மற்றும் ரஷ்யாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான், அமெரிக்காவிற்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கும் விதமாக, இந்தியா, சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் நெருக்கும் காட்டுவது ட்ரம்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.