Trump Hamas: ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் நரகத்தை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், ஹமாஸ் குழுவினர் சற்றே இறங்கி வந்துள்ளனர்.
இறங்கி வந்த ஹமாஸ் குழு..
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தின், சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. அதன்படி, பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் காஸா நிர்வாகத்தை மாற்றுதல் ஆகியவை அடங்கும். அதேநேரம், ஒப்பந்தத்தின் பிற விதிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தனது திட்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த அறிக்கையில், ஹமாஸ், ட்ரம்பின் 20 அம்ச அமைதித் திட்டத்திற்கான தனது முதல் பதிலை அளித்துள்ளது. ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை குழுவிற்கு இந்த திட்டத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ அவகாசம் அளித்திருந்த நிலையில் ஹமாஸ் தனது முதற்கட்ட பதிலை வழங்கியுள்ளது. ஆனாலும், இந்த திட்டத்தை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் வைத்திருக்க டிரம்ப் விரும்புவாரா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அமைதி ஒப்பந்தத்தில் சிக்கல் என்ன?
அமைதி ஒப்பந்தத்தில் வலியுறுத்தியபடி, ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற அமெரிக்க-இஸ்ரேலிய முக்கிய கோரிக்கைக்கு இணங்குமா என்பதை அந்தக் குழு விளக்கவில்லை. இந்த நிபந்தனையை அவர்கள் கடந்த காலங்களில் தொடர்ந்து மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆயுதங்களை கைவிடுவதை பற்றி விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் உடனடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயாராக இருப்பதாக” ஹமாஸ் தெரிவித்துள்ளது.
மேலும், “காஸா பகுதி மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருதல், கைதிகள் பரிமாற்றம், (மற்றும்) உடனடி உதவி நுழைவு ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முயற்சிகளையும், அரபு, இஸ்லாமிய மற்றும் சர்வதேச முயற்சிகளையும் பாராட்டுவதாக” ஹமாஸ் விளக்கியுள்ளது.
நாங்க ரெடி..
ஹமாஸின் அறிக்கையின்படி, "ட்ரம்பின் திட்டத்தில் உள்ள பரிமாற்ற ஆலோசைகளின்படி, பரிமாற்றத்தை செயல்படுத்த தேவையான கள நிலைமைகளுடன், அனைத்து ஆக்கிரமிப்பு கைதிகளையும், உயிருடன் உள்ளவர்கள் மற்றும் எஞ்சியவர்களை விடுவிப்பதற்கான ஒப்புதலையும்" குழு உறுதிப்படுத்தியது. அதோடு, "பாலஸ்தீன தேசிய ஒருமித்த கருத்து மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய ஆதரவின் அடிப்படையில் காஸா பகுதியின் நிர்வாகத்தை பாலஸ்தீன சுயாதீன (தொழில்நுட்ப வல்லுநர்கள்) அமைப்பிடம் ஒப்படைக்க" ஹமாஸ் தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ட்ரம்ப் முன்மொழிந்த ஒப்பந்தம்
இஸ்ரேலுடனான தற்போதைய போரை உடனடியாக நிறுத்தக் கோரும் 20 அம்ச திட்டத்தை முன்வைத்த ட்ரம்ப், காஸாவின் போருக்குப் பிந்தைய நிர்வாகத்திற்கான ஒரு கட்டமைப்பையும் வகுத்தார். இஸ்ரேல் மற்றும் பல அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து ஆதரவைப் பெற்ற ட்ரம்பின் திட்டம், உடனடி போர்நிறுத்தம், இஸ்ரேலிய காவலில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளையும் பரிமாறிக்கொள்வது, காசாவிலிருந்து இஸ்ரேல் படிப்படியாக வெளியேறுவது, ஹமாஸை ஆயுதங்களை கைவிடச் செய்வது மற்றும் ஒரு சர்வதேச அமைப்பின் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாகத்தை நிறுவுவது ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இதற்கு ஞாயிற்றுக்கிழமைக்குள் ஒப்புக்கொள்ளாவிட்டால், ஹமாஸ் படையினர் நரகத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ட்ரம்ப் எச்சரித்த நிலையில், பகுதியளவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.