கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று உலகை ஆட்டிப்படைத்து வந்த நிலையில், இந்தாண்டாவது அதிலிருந்து விடிவு கிடைத்துவிடாதா என்கிற எண்ணத்தில்தான் மக்கள் இருந்தார்கள். ஆனால், இந்தாண்டும் இயற்கை பேரிடருடன்தான் மக்கள் விழித்தனர்.


மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கும் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.


மோசமான ரயில் விபத்து:


இந்த அதிர்ச்சியில் இருந்து விழிப்பதற்குள்ளாகவே அடுத்த அதிர்ச்சி மக்களை தாக்கியுள்ளது. ஐரோப்பிய நாடான கிரேக்க நாட்டில் வரலாற்றில் இதுவரை நடந்திராத மோசமான ரயில் விபத்து அரங்கேறியுள்ளது. நேற்று, இரவு பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 36 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 85 பேர் காயமடைந்தனர்.


காயமடைந்தவர்களில் 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறிய பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டு அதன் ஜன்னல்கள் உடைந்தது. 


ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பெரும்பாலான ரயில் பெட்டிகள் கடுமையான சேதத்தை சந்தித்து உருக்குலைந்து விட்டது. 


கொடுங்கனவு போன்ற சம்பவம்:


விபத்தில் இருந்து நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த 28 வயது பயணி ஸ்டெர்ஜியோஸ் மினெனிஸ் பேசுகையில், "விபத்தை தொடர்ந்து பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. கொடுங்கனவு போல இருந்தது. உருண்டு கொண்டே இருந்தோம். அங்கு அச்சம் நிலவியது. எல்லா இடத்திலும் தீ பரவியது" என்றார்.


மொத்தம் 350 பேரில் சுமார் 250 பேர் பஸ்களில் தெசலோனிகிக்கு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து அரசின் செய்தி தொடர்பாளர் ஜியானிஸ் ஓகோனோமோவ் கூறுகையில், "காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, இடிபாடுகளில் காணாமல் போனவர்களைத் தேடுவது, கண்டறிவது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உளவியல் ஆதரவை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்றார்.


விபத்தில் இருந்து தப்பியது எப்படி?


ரயில் விபத்தில் தப்பியது குறித்து பேசிய பயணி ஒருவர், சூட்கேஸால் ரயில் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினேன் என்றார். இதுகுறித்து பேசிய மற்றொரு பயணி, நிலநடுக்கம் போல் இருந்தது என்றார்.


இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் சென்றபோது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரிசாவில் ஸ்டேஷன் மாஸ்டரை போலீசார் தற்காலிகமாக காவலில் எடுத்துள்ளது. சாட்சியங்களை விசாரணைக்கு அழைத்துள்ளது. 1972ல் லாரிசாவுக்கு வெளியே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.


கிரேக்க நாட்டில் ரயில்களை நவீனமயமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது.