தன்னைப் படுகொலை செய்ய முயற்சித்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து, கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார் என்று டொனால்ட் ட்ரம்ப் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். 


விஸ்கான்சினில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் அதிபர் வேட்பாளர் நாளில் கலந்துகொண்டார். அப்போது கட்சியின் வேட்பாளர் தாக்கலை ஏற்றுக்கொண்டார். அவருடன் மனைவி மெலானியா ட்ரம்ப், இவாங்கா ட்ரம்ப் ஆகியோரும் உடன் கலந்துகொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:


’’பென்சில்வேனியாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வின்போது கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார். உண்மையில் இங்கு இப்போது நான் வந்திருக்கவே கூடாது.


நாட்டின் வரலாற்றிலேயே தலைசிறந்த 4 ஆண்டுகள்


நம்பிக்கையுடனும் பக்தியுடனும், அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான உங்கள் பரிந்துரையை நான் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன். இப்போதில் இருந்து 4 மாதங்களில் வியக்கத்தக்க வெற்றியைப் பெறுவோம்.  நாட்டின் வரலாற்றிலேயே தலைசிறந்த 4 ஆண்டுகளாய் ஆட்சி இருக்கும்.


அமெரிக்காவின் அனைத்து மக்களுக்கும் அதிபராய் இருப்பேன். பாதி மக்களுக்கு அதிபராக இருக்க முடியாது. ஏனெனில் பாதி அமெரிக்காவை மட்டும் வெற்றிகொள்வதில், உண்மையான வெற்றி கிடையாது. ஒவ்வொரு இனம், மதம், நிறம் மற்றும் சமயத்தின் குடிமக்களுக்கான பாதுகாப்பு, செழிப்பு மற்றும் சுதந்திரத்தின் புதிய சகாப்தத்தை நாம் ஒன்றாகத் தொடங்குவோம்’’.


இவ்வாறு அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.






ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் யார்?


இதற்கிடையே ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். இதனிடையே, வயது மூப்பால் பைடன் நியாபக மறதி போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து பைடன் விலக வேண்டும் என, குடியரசு கட்சியை சார்ந்த பல மூத்த தலைவர்களும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இதனால் துணை அதிபர் வேட்பாளர் போட்டியிலுள்ள கமலா ஹாரிஸ், அதிபராகப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.