(Source: ECI | ABP NEWS)
Gaza UN Report: பேரழிவை சந்தித்த காசா; இடிபாடுகளை அகற்றவே இத்தனை ஆண்டுகள் ஆகுமா.?; ஐ.நா பகீர் அறிக்கை
இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் காசாவில், இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகளும், விவசாய நிலங்களின் வளத்தை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் ஆகும் என்றும் ஐ.நா அதிர்ச்சி ரிப்போர்ட்டை அளித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்தருக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் தொடங்கி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான காசா குறித்து, ஐக்கிய நாடுகள் சபை சேத மதிப்பீட்டு குறித்து ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
“இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள், விவசாய நிலங்களின் வளங்களை மீட்க 25 ஆண்டுகள்“
ஐ.நா வின் அறிக்கையின்படி, இஸ்ரேலின் தாக்குதலால், காசாவின் 80 சதவீத கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த சேத மதிப்பு 4.5 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலில் காசாவில் இடிந்து விழுந்துள்ள இடிபாடுகளை அகற்றுவது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளதாகவும், அவற்றை அகற்றவே 1.2 ட்ரில்லியன் டாலர்கள் செலவாகும் என்றும் ஐ.நா-வின் அறிக்கை குறிப்பிடுகிறது.
வளமான மண்ணுக்கு பெயர் பெற்ற காசாவில், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, வெள்ளரி உள்ளிட்ட பியர்களும் விளைவிக்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த போரால், அங்குள்ள 15,000 ஹெக்டேர் வளமான நிலத்தில், 232 ஹெட்டேர் மட்டுமே மீதமுள்ளதாகவும், முன்னர் உற்பத்தி நடைபெற்ற நிலத்தில் 98.5 சதவீதம் தரிசாக மாறிவிட்டதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா-வின் சேத அறிக்கை.
காசாவில் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ள 90% பேர்
மேலும், இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் உள்ள 94 சதவீத மருத்துவமனைகளும், 90 சதவீத பள்ளிகளும் அழிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 66,158 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதோடு, இந்த 2 ஆண்டுகள் போரின் காரணமாக காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில், 90 சதவீதம் பேர் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் காசா பகுதியில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இஸ்ரேலின் தாக்குதல்களால் 83 சதவீத பாசனக் கிணறுகள் அடைபட்டுவிட்டன. அதோடு, வெடிபொருட்கள் மற்றும் ரசாயனங்கள் காரணமாக, காசாவின் மண்ணில் ரசாயனத்தின் அளவு 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசாவின் 80 சதவீத பகுதி ராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.நா-வின் சுயாதீன விசாரணை கமிஷன், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக வரையறுத்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், அங்கு குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கலே, மறுகட்டமைப்பிற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று கூறப்படுவதற்கு காரணம்.
ஒட்டு மொத்தத்தில், இந்த போரால் ஏற்பட்ட சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று ஐ.நா-வின் அறிக்கை எச்சரித்துள்ளது.





















