Donald Trump: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசியல் பயணத்தை தொடங்கியது முதல் தற்போது வரை எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு:

வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கம் சார்பில், வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நடத்தப்பட்ட இரவு விருந்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்று இருந்தார். அப்போது ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைவர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், சம்பவமானது பாதுகாப்பு குறைபாடு, ட்ரம்ப் மீதான அதிருப்தி, ஆளுங்கட்சி சார்பிலேயே திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என பல்வேறு வகையான விவாதங்களை தூண்டியுள்ளது.

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம்?

ஆளும் குடியரசு கட்சிக்கும் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இந்த துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் கடும் வார்த்தை மோதல்கள் வெடித்துள்ளன. குறிப்பாக இந்த ஒட்டுமொத்த துப்பாக்கிச் சூடு சம்பவமும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வன்முறைச் சம்பவமோ என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் வெள்ளமென பாய்ந்தன. சம்பவம் தொடர்பான வீடியோக்கள், நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் உடல்மொழி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஏராளமான கதைகள் இணையத்தில் பரவியுள்ளன. ஆதாரமற்றதும், பெரும்பாலும் முரண்பாடானதுமான இந்த ஊகங்களின் சுழல், அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மீதான நம்பிக்கை மக்களிடையே வெகுவாக குறைந்துள்ளதை காட்டுகிறது.

ட்ரம்புக்கு வந்த அச்சுறுத்தல்கள்:

அதேநேரம், ட்ரம்ப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவது என்பது இது முதல்முறையல்ல. அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கியது முதலே ஏராளமான வன்முறை சம்பவங்களை எதிர்கொண்டு வருகிறார். அவற்றின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • மார்ச், 2016: ஒஹியோவில் தேர்தல் பரப்புரையின் போது போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி ட்ரம்பை நெருங்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்
  • ஜுன், 2016: நெவேடாவில் ட்ரம்ப் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தபோது, அவரை கொல்லும் நோக்கில் காவலரின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் கைதானார்
  • செப்டம்பர், 2017: நார்த் டகோடாவில் ஃபோர்க்லிஃப்ட் வாகனத்தை திருடி ட்ரம்பின் வாகன அணிவகுப்பின் மீது மோதுவதற்காக முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்
  • அக்டோபர், 2018: விஷ விதைகளை ட்ரம்புக்கு பார்சலில் அனுப்பிய முன்னாள் கப்பற்படை வீரர் கைது
  • ஆகஸ்ட், 2020: ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தபோது வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் ட்ரம்ப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்
  • செப்டம்பர், 2020: அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முடிவை கைவிட வேண்டும் என மிரட்டி கடிதம் எழுதிய ஒருவர் கைது செய்யப்பட்டார்
  • ஜுலை, 2024: பென்சில்வேனியாவில் பரப்புரை மேற்கொண்டபோது சரமாரியாக பாய்ந்த 8 தோட்டாக்களில் ஒன்று ட்ரம்பின் வலது காதை கிழித்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • செப்டம்பர், 2024: ஃப்ளோரிடாவில் தனக்கு சொந்தமான கோல்ஃப் க்ளப்பில் ட்ரம்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
  • பிப்ரவரி, 2026: ஃப்ளோரிடாவில் உள்ள ட்ரம்பின் வீட்டின் அருகே ஷாட் கன் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வலம் வந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றது

என பல அச்சுறுத்தல்களை ட்ரம்ப் தொடர்ந்து எதிர்கொண்டபடியே உள்ளார்.