நெதர்லாந்து நாட்டின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான ட்ரைஸ் வான் அக்ட், தனது மனைவி யூஜெனியுடன் சேர்ந்து கருணை கொலை செய்து கொண்டார். சொந்த ஊரான நிஜ்மேகனில் 93ஆவது வயதில், இருவரும் ஒருவரை ஒருவர் கைகளை பிடித்தபடி மரணம் அடைந்துள்ளனர். 


மனைவியுடன் கருணை கொலை செய்து கொண்ட முன்னாள் பிரதமர்:


கடந்த 1977ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை, நெதர்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்த ட்ரைஸ் வான் அக்ட், கிறிஸ்தவ ஜனநாயக முறையீட்டு கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். தான் கொண்ட கொள்கையில் இறுதி வரை உறுதியுடன் இருந்த காரணத்தால்தான், பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 


பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக போராடும் உரிமைகள் மன்றத்தை கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கினார். ட்ரைஸ் வான் அக்ட் - யூஜெனி தம்பதி மறைவு குறித்து செய்தியை உரிமைகள் மன்றம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 


இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "நெருங்கிய குடும்பத்தினருடன் கலந்தாலோசித்ததில், எங்கள் நிறுவனர் மற்றும் கெளரவத் தலைவரான ட்ரைஸ் வான் அக்ட் பிப்ரவரி 5ஆம் தேதி, அவரது சொந்த ஊரான நிஜ்மேகனில் காலமானார் என்பதை தெரிவித்து கொள்கிறோம். தனது மனைவியுடன் உயிரிழந்துள்ளார். 


"முடிவில்லா காதல் காவியம்"


ட்ரைஸ் வான் அக்ட்-க்கு எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மனைவி யூஜெனி வான் அக்ட் ஆதரவாக இருந்துள்ளார். ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அவர் எப்போதும் தனது மனைவியை 'my girl' என்றுதான் குறிப்பிடுவார். இறுதிச் சடங்கு தனிப்பட்ட முறையில் நடந்தது. வான் அக்ட் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 93 வயது.


கடந்த 2019-இல், ட்ரைஸ் வான் அக்ட்-க்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் கடைசி வரை முழுமையாக குணமடையவில்லை. அவரும் அவரது மனைவியும் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தனர். ஒருவரைவிட்டு ஒருவர் இல்லாமல் வாழ முடியவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.


நெதர்லாந்து நாட்டில் வயதான கணவன் - மனைவி இணைந்து கருணை கொலை செய்வது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இது, இரட்டை கருணைக்கொலை என அழைக்கப்படுகிறது. இரட்டை கருணைக்கொலையின்போது, தம்பதி இருவருக்கும் ஒரே நேரத்தில் விஷ ஊசி போடப்படும்.


கடந்த 2022ஆம் ஆண்டு, 29 தம்பதிகள் கருணைக் கொலை செய்து கொண்ட நிலையில், 2021ஆம் ஆண்டு 16 தம்பதிகள் கருணைக் கொலை செய்து கொண்டனர். கடந்த 2020ஆம் ஆண்டு, 13 தம்பதிகள் கருணைக் கொலை செய்து கொண்டனர்.


இதையும் படிக்க: இதை யாரும் எதிர்பார்க்கல.. நவாஸ் ஷெரீப் வெச்ச ட்விஸ்ட்.. பாகிஸ்தானின் புதிய பிரதமர் இவரா?