இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






உலகிலேயே ராணியாக நீண்டகாலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ள ராணி எலிசபெத்துக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணத்தின்போது, ராணி இரண்டாம் எலிசபெத் உடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். 


அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து வெளியான அறிக்கையில், "இந்தியா முழுவதும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும், வழக்கமாக தேசிய கொடி ஏற்றப்படும் அனைத்து கட்டிடங்களிலும் துக்க நாளன்று தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.






ஸ்காட்லாந்தின் பால்மோரலில் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததைத் தொடர்ந்து பிரிட்டன் அரசாங்கத்தின் "ஆபரேஷன் யூனிகார்ன்" அமல்படுத்தப்பட்டுள்ளது.


ராணியின் மரணம் மற்றும் இறுதிச் சடங்கிற்கு இடையேயான முதல் 10 நாட்களில் நிகழ்வுகளை நிர்வகிக்க இங்கிலாந்து அலுவலர்கள் ”ஆபரேஷன் பிரிட்ஜ்” என பெயர் வைத்திருந்தனர். ஆனால், இங்கிலாந்து ராணி ஸ்காட்லாந்தில் இறந்ததால் தற்போது ”ஆபரேஷன் யூனிகார்ன்” என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று மறைந்த இங்கிலாந்து ராணியின் உடல் லண்டனுக்கு திரும்ப இருக்கிறது.