நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமானநிலையத்தில் வரிசையில் காத்திருந்த முன்னாள் ராணுவ தளபதியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவத்தை அந்நாட்டு அதிபர் ஜோபைடன் திரும்பப் பெற்ற நிலையில், மீண்டும் அங்கு தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் ஆப்கானில் உள்ள அரசுப்படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து கலவரமாக மாறியது. இதனையடுத்து எப்படியாவது உயிரினைக்காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அச்சத்தில் ஆப்கானிஸ்தானிய மக்கள் கூட்டம் கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறினர். குழந்தைகள்,பெண்கள் உள்பட்ட பலரும் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக சென்று வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து பத்திரமாக வெளியேற்ற அந்தந்த நாட்டு அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.





மேலும் தாலிபான்கள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் வன்முறையினால், சில நாட்களுக்குள்ளாகவே ஆப்கானிஸ்தானில் குண்டூஸ், தலூக்கான், ஷேபர்கான், ஜரான்ஜ், சமங்கன், ஃபாரா போன்ற மாகாணங்களை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து தாலிபான்களின் ஆட்சியை நடத்துவதற்காக அதிகாரிகளை நியமனம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் ஆப்கானிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்த வாலி முகமது அகமது சாய் அதிரடியாக மாற்றப்பட்டதையடுத்து புதிய ராணுவ தளபதியாக ஹிபதுல்லா அலிசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தாலிபான்களின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கத்தொடங்கியது.


 






ஏற்கனவே வன்முறைகள் அரங்கேறி வருகின்ற நிலையில், அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெளியேறிவருகின்றனர். இந்த வரிசையில் ஆப்கானிஸ்தானில் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்து வந்த வாலி முகமது அகமது சாய் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்து, காபூல் விமானநிலையத்தில் வரிசையில் காத்திருக்கிறார். கம்பீரமாக ராணுவ உடையுடன் நாட்டைக்காத்து வந்த ராணுவ தளபதி, அந்நாட்டினையே விட்டு வெளியேறும் நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில்,“ இந்தியா வருகிறீர்களா? மனத்தினை பாதிக்கும் நிகழ்வு“, என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.


குறிப்பாக ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் மற்ற நாட்டினரை அழைத்துச்சென்று விட வேண்டும் என தாலிபான்கள் கெடுவிடுத்துள்ளனர். இந்நிலையில் தான் ஜி 7 நாடுகள் இதுக்குறித்து விவாதிக்கவுள்ளனர். மேலும் அமெரிக்க அந்நாட்டு மக்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.