USA Iran War: அமெரிக்கா உடனான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப, ஈரான் பரிந்துரைத்த 3 கட்ட திட்டங்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த பரிந்துரை:
பாகிஸ்தானில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட இரண்டாவது கட்ட போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையை, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு தரப்புகளுமே நிராகரித்தன. இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்த விரும்பினால், அமெரிக்கா மூன்று கட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் என ஈரான் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெஹ்ரான் முன்வைத்துள்ள பரிந்துரைகள் போரை முடிவுக்கு கொண்டு வருவதோடு, ஹார்மஸ் மற்றும் அணு ஆயுத பிரச்னையை மையமாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வெளியாகியுள்ள ஊடக தகவல்களின்படி, பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டுமானால், பரிந்துரைத்துள்ள 3 பரிந்துரைகளையும் அமெரிக்க பின்பற்ற வேண்டும் என மத்தியஸ்தர்கள் மூலம் ஈரான் தெரிவித்துள்ளதாம்.
ஈரான் சொன்ன மூன்று பரிந்துரைகள் என்ன?
முதற்கட்டம்: ஈரான் மற்றும் லெபனானிற்கு எதிரான போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படாது என்பதற்கான உத்தரவாதங்களை வழங்குவது.
இரண்டாவது கட்டம்: முதற்கட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மஸ் நீர்வழிப்பாதையின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்து இருதரப்பும் இரண்டாம் கட்டத்தில் விவாதிக்கலாம்.
மூன்றாவது கட்டம்: மேற்கண்ட இரண்டு நிலைகளை கடந்த பின்னரே ஈரான் அணுசக்தி குறித்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் என தெரிவிகப்பட்டுள்ளது. யுரேனியத்தை செறிவூட்டுவதை நிறுத்தி, கையிருப்பில் இருப்பதை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என நீண்டகாலமாக அமெரிக்க வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா சொல்வது என்ன?
ஈரானின் முன்மொழிவுக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ், "ஈரானுடன் நடைபெற்று வருவது மிகவும் நுட்பமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள். அமெரிக்கா பத்திரிகைகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தாது. அதிபர் கூறியது போல, அதிகாரத்தில் இருப்பது அமெரிக்காதான். அது அமெரிக்க மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான ஒப்பந்தத்தை மட்டுமே மேற்கொள்ளும்; ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்காது" என்று விளக்கமளித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற இருந்த இருதரப்புக்கும் இடையேயான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை கைவிட்டபிறகு, புதிய பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இரண்டு முறை பாகிஸ்தானுக்கு வருகை தந்தபோதிலும், வாஷிங்டனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டார். இதற்குப் பதிலளித்த டிரம்ப், கலந்துரையாடல்களை எப்போது வேண்டுமானாலும் தொலைபேசி வாயிலாக நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் ஆலோசனை
பிப்ரவரியில் தொடங்கிய போர், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களை நெருங்கிய போதிலும், ஒரு தீர்வை எட்டும் நிலைக்கு வரவில்லை. இடைக்கால போர் நிறுத்தம் காலவரையின்றி அமலில் உள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மத்திய கிழக்கு பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்தம் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக, அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க ரஷ்யாவிற்கு புறப்பட்டுள்ளார். இதனிடையே, தனது உயர்மட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுக்களுடன் ஒரு சூழ்நிலை அறை கூட்டத்தை நடத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
