உலக பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்கள் மற்றும் எக்ஸ் தளத்தில் உரிமையாளருமான எலான் மஸ்க், தனது எக்ஸ் தள பதிவு ஒன்றில், அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2030-ம் ஆண்டுக்கள் உலகப்போர் நடக்கும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“5 அல்லது 10 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“
எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், சமூகவலைதளத்தில் தனது மனதில் உள்ளதை வெளிப்படையாகவும், தைரியமாகவும் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், உலகளாவிய மோதல் குறித்து எக்ஸ் வலைதளத்தில் ஹண்ட்டர் ஆஷ் என்ற பயனர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த பதிவில்,''போர் அச்சுறுத்தல்கள் இல்லாததால் உலகெங்கிலும் உள்ள அரசுகள் செயலற்றுப் போயுள்ளதாகவும், நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளதாகவும் ஹண்ட்டர் ஆஷ் கூறியிருந்தார்.
ஹண்ட்டர் ஆஷின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், போர் தவிர்க்க முடியாதது. இன்னும் 5 ஆண்டுகளில் நடக்கும். அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும் என்று கூறியுள்ளார்.
எனினும், எலான் மஸ்க் தான் தெரிவித்துள்ள கருத்தைப் பற்றி விரிவாக ஏதும் கூறவில்லை. இதனால் எக்ஸ் பயனர்கள் மத்தியில் விரைவில் என்ன நடக்குமோ என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், அரசாங்க செயல்திறன் துறையின்(DOGE) தலைவராக இருந்த எலான் மஸ்க் பல அதிரடிகளை அரங்கேற்றியவர். மேலும், ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், தற்போது மீண்டும் அவர்களுக்குள் நட்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் பல போர்களை நிறுத்தியுள்ளதுடன், தற்போது நடைபெற்றுவரும் போர்களை நிறுத்தும் தீவிர முயற்சியிலும் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது நண்பர் எலான் மஸ்க்கின் இந்த கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.