நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000 ஐ தாண்டியது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பலி எண்ணிக்கை உயரும் என்றும் நிபுணர்கள் அஞ்சுகின்றனர். 






நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களுக்கு சென்று பாதிப்புகளை நேரடியாக துருக்கி அதிபர் எர்டோகன் பார்வையிட்டார். நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில், தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மொத்த உயிரிழப்பு 24 ஆயிரம் கடந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலநடுக்கம்


துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இந்த திடீர் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள் சீட்டுகட்டு போல் சரிந்து நொருங்கின. தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தில் இருந்து வெளியே வர மக்கள் முயற்சி மேற்கொள்ள நினைக்கும்போது, துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


துருக்கியில் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 36 மணிநேரத்தில் மட்டும் துருக்கியில் 100 க்கு மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நிபுணர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 


அதன்படி, கடந்த 36 மணிநேரத்தில் தென்கிழக்கு துருக்கியில் 4 ரிக்டர் என்ற அளவில் 81 நில அதிர்வுகளும், 5 என்ற ரிக்டர் அளவில் 20 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளது. மேலும், 6 ரிக்டர் அளவில் மூன்றும், 7 ரிக்டர் அளவில் 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. 


இதுவரை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்கள்:


கடந்த 1999 ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கம் தான், துருக்கி வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. அப்போது, டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகினர்.  அதேபோல், கடந்த 2003ம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 க்கும் அதிகமானோர் பலியாக,  2011ம் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் 600 க்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர். 


கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 100 க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தற்போது வரை 15 ஆயிரம் பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், துருக்கியின் இரண்டாவது மோசமான நிலநடுக்கமாக இது பதிவாகலாம்.