Trump Vs Nobel Prize: “எனக்கு நோபல் பரிசு கொடுக்கலைன்னா, அமெரிக்காவுக்கே அவமானம்“ - மீண்டும் அடம்பிடிக்கும் ட்ரம்ப்
நோபல் பரிசு கேட்டு தொடர்ந்து அடம்பிடிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது அதிரடியாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, தனக்கு பரிசு வழங்கப்படாவிட்டால், அமெரிக்காவிற்கே அவமானம் என கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வரிசையாக போர்களை நிறுத்தி வருவதாகவும், அதனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி வருகிறார். அந்த கோரிக்கையில் ஒருபடி மேலே போய், தற்போது அதிரடியாக ஒரு கருத்தை கூறியுள்ளார் ட்ரம்ப். அது குறித்துதான் தற்போது பார்க்கப் போகிறோம்.
தொடர்ந்து அடம்பிடிக்கும் ட்ரம்ப்
பல நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் பங்களிப்பை அளித்துவரும் நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா-பாகிஸ்தான் மோதலை தான் தீர்த்து வைத்ததாகவும், அதனால் அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அந்த நிகழ்வில் பேசும்போது, “உலக அரங்கில், மதிக்கப்படும் பல விஷயங்களை செய்துவருகிறோம், சமாதான உடன்படிக்கைகளை ஏற்படுத்தி வருகிறோம். இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா நாடுகள் இடையே போரை நிறுத்தினோம்“ என்று கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளை நினைத்துப் பாருங்க, நீங்கள் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், நான் எப்படி அந்த போரை நிறுத்தினேன் என்று உங்களுக்கு தெரியவரும் என்று கூறிய ட்ரம்ப், வர்த்தக ஒப்பந்தங்களை முன் வைத்து போரை நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல், தாய்லாந்து, கம்போடியா, அர்மீனியா, அஜர்பைஜான், கொசோவோ, செர்பியா, இஸ்ரேல், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ருவாண்டா, காங்கோ நாடுகள் இடையே ஏற்பட்ட போர்களை நாங்கள் நிறுத்தினோம் என்றும், அந்த போர்களில் 60 சதவீதம் வர்த்தகத்தை சுட்டிக்காட்டியே நிறுத்தினோம் என்றும் கூறினார்.
இதனால், ஒவ்வொரு போர் நிறுத்தத்திற்கும் தனக்கு ஒரு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று தான் கூறியதாகவும், ஆனால், ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்கும் என்று கூறினார்கள், ஆனால் அது மிகப் பெரிய போர், நான் 7 போர்களை நிறுத்திவிட்டேன் என்று சொல்லியிருக்கிறேன் என்று ட்ரம்ப் கூறினார்.
“எனக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டால், அமெரிக்காவிற்கே அவமானம்“
இந்த நிலையில் தான், மீண்டும் நோபல் பரிசு குறித்து பேசியுள்ளார் ட்ரம்ப். சமீபத்தில் விர்ஜினியாவின் குவான்டிகோ நகரில் ராணுவ அதிகாரிகளுடன் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்தும் முயற்சியின் இறுதிக் கட்டத்தில் உள்ளோம் எனவும், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்“ என்றும் கூறியுள்ளார்.
மேலும், போர் நிறுத்தத்திற்கு அனைத்து அரபு நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இத்திட்டம் வெற்றி அடைந்தால், 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியவனாக இருப்பேன் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதோடு, இதைப்போல் யாரும் செய்ததில்லை என்றும், அதற்காக தனக்கு நோபல் பரிசு கொடுப்பார்களா என தெரியவில்லை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
மேலும், பொதுவாக எழுத்தாளர்களுக்கே நோபல் பரிசு செல்வதாகவும், அதன்படி, ‘ட்ரம்ப் எப்படி போரை நிறுத்தினார்‘ என்று புத்தகம் எழுதுபவர்களுக்கே நோபல் பரிசை கொடுத்துவிடுவார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதற்கெல்லாம் மேலாக, தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்றால், அது அமெரிக்காவிற்கே அவமானம் என்று கூறியுள்ள ட்ரம்ப், காசா போரை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்கும் என்று நினைப்பதாகவும் தெரிவித்தார்.




















