Crude Oil Products List: உலகத்தின் செயல்பாடுகளையும், பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் முக்கிய சக்தி கச்சா எண்ணெய். அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உலகம் வளரத் தொடங்கிய பிறகு அதை தீர்மானிப்பதில் முக்கியமான அங்கமாக இருந்தது கச்சா எண்ணெய். இதன் காரணமாகவே உலக அரங்கில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளுக்கு தனி மரியாதை இருந்து வந்தது.
கச்சா எண்ணெயில் இருந்து பிரிக்கும் பொருட்கள்:
கச்சா எண்ணெய் ஏன் இந்த உலகை ஆள்கிறது? இதில் இருந்து என்னென்ன பொருட்கள் தயாரிக்கப்படுகிறது? என்பதை கீழே காணலாம்.
1. எல்பிஜி சிலிண்டர்
2. பெட்ரோல்/ கேசலின்
3. நாப்தா எண்ணெய்
4. மண்ணெண்ணெய்
5. லூப்ரிகேன்ட் ஆயில்
6. தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்கள்
7. கப்பல்கள் இயங்குவதற்கான எரிபொருள்
8. தார்
எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் ஒரு குறிப்பிட்ட கொதிநிலையில் கொதிக்கவைக்கப்பட்டு, அதில் இருந்து பல பொருட்கள் பிரிக்கப்படுகிறது.
கச்சா எண்ணெய்யை முதலில் 350 டிகிரி முதல் 400 டிகிரி வெப்பநிலையில் கொதிக்கவைப்பார்கள். பின்னர், பெரிய கோபுரம் போன்ற கொதிகலனில் கொதிக்கவைக்கப்படுகிறது. அதில் இருந்த மெலிதான மூலக்கூறுகள் மேலே செல்லும். கடினமான மூலக்கூறுகள் அடியிலே தங்கும். ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு வெப்பநிலையில் அந்த மூலக்கூறுகள் வெப்பமாகி மனிதர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களாக கிடைக்கிறது.
1. சிலிண்டர்:
கோபுரம் ( டவர்) போன்ற கொதிகலனில் கச்சா எண்ணெய் கொதிக்கவைக்கப்பட்டு அதன் உச்சியில் கிடைக்கப்படும் பொருளே எல்பிஜி சிலிண்டர் ஆகும். அதாவது, கச்சா எண்ணெய்யின் மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இது கிடைக்கிறது. இதையே நாம் வீடுகளிலும், கடைகளிலும் உணவு தயாரிக்க பயன்படுத்துகிறோம்.
2. பெட்ரோல்:
கச்சா எண்ணெயின் மூலக்கூறுகள் பிரிந்து 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கிடைப்பதே பெட்ரோல் ஆகும். இதுவே நமது கார்கள், இரு சக்கர வாகனங்களில் எரிபொருளாக நாம் பயன்படுத்துகிறோம்.
3. நாப்தா எண்ணெய்:
நாப்தலின் எனப்படும் நாப்தா எண்ணெய்யும் கச்சா எண்ணெயில் இருந்தே பிரித்தெடுக்கப்படுகிறது. இது 80 டிகிரி செல்சியஸ் முதல் 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த நாப்தலின் பிளாஸ்டிக் தயாரிப்பு உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
4. மண்ணெண்ணெய்:
கச்சா எண்ணெய் பிரித்தெடுக்கப்படும்போது 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கிடைப்பதே கெரோசின் எனப்படும் மண்ணெண்ணெய். தமிழ்நாட்டில் பல லட்சம் குடும்பங்கள் சமைப்பதற்கு இதையே பயன்படுத்தி வருகின்றனர். சிலிண்டர் அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தப்படும் முன்னர் மண்ணெண்ணெய்யே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
5. டீசல்:
லாரி, பேருந்துகள், சில குறிப்பிட்ட எஞ்ஜின் ரக கார்கள் என பொதுப்போக்குவரத்து, சரக்குப்போக்குவரத்து வாகனங்கள் இயங்குவது டீசலினால் ஆகும். கச்சா எண்ணெய்யின் மூலக்கூறுகளை 250 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதிக்கவைக்கும்போது கிடைப்பதே டீசல் ஆகும்.
6. லூப்ரிகேன்ட் எண்ணெய்:
லூப்ரிகேன்ட் ஆயிலும் கச்சா எண்ணெயில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. கச்சா எண்ணெயின் மூலக்கூறுகள் 300 டிகிரி செல்சியசில் கொதிக்கும்போது இவை கிடைக்கிறது. வாகனங்களில் எஞ்ஜின் ஆயில்களாக இவை பயன்படுத்தப்படுகிறது.
7. கப்பலுக்கான எரிபொருள்:
ஃப்யூல் ஆயில் எனப்படும் கனரக எஞ்ஜின் இயங்குவதற்கான எரிபொருள் கச்சா எண்ணெய்யில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. 350 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இவை கிடைக்கிறது. கப்பல்களின் எஞ்ஜின்களில் இந்த எண்ணெய்களே பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளிலும் மிகப்பெரிய ராட்சத இயந்திரங்கள் இயங்குவதற்கும் இந்த எண்ணெய்களே பயன்படுத்தப்படுகிறது. மின்சார தயாரிப்பு நிலையங்களிலும் இந்த எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.
8. தார்:
கச்சா எண்ணெயின் மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு மேலே கூறிய பொருட்கள் தயாரிக்கும்போது அதன் அடியிலே தேங்கும் பொருளே இந்த பிடுமேன். இதுவே தார் ஆகும். இந்த தாரே சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படுகிறது.
கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பொருட்கள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், மனிதர்களின் பயன்பாட்டிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகின் பல நாடுகளும் தற்போது பெட்ரோல், சிலிண்டர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.
