கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் ஆணுறைகளைப் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக ஆசியாவில் மிகப்பெரிய ஊடகங்களுள் ஒன்றான நிக்கெய் ஆசியா செய்தி வெளியிட்டுள்ளது. பெரும்பாலான துறைகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனத்திலும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. 


பெருவாரியான மக்கள் தொகை வீட்டிலேயே கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்ததால் ஆணுறை பயன்பாடு குறைந்து விற்பனை சுமார் 40 சதவிகிதம் வீழ்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான கேடக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ மியா கைத், ஆணுறை பயன்பாடு குறைந்ததற்குக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் நலனுக்கான மையங்களும் மூடப்பட்டிருந்தது காரணம் எனக் கூறியுள்ளார். 



மலேசியாவைச் சேர்ந்த கேடக்ஸ் நிறுவனம் தற்போது மருத்துவ கையுறைகள் தயாரிப்பு வர்த்தகத்தில் லாபம் பெருகியிருப்பதைக் குறிப்பிட்டு, தற்போது கையுறை தயாரிப்புக்காக தாய்லாந்தில் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார். 






உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் 5 ஆணுறைகளுள் ஒன்று கேடக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என அறியப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தும் வரை, கேடக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி இரட்டை இலக்க எண்ணாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 



சுமார் 140 நாடுகளுக்கு ஆணுறைகளை ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம் `டியூரெக்ஸ்’ என்ற பெயரில் ஆணுறைகளை விற்பனை செய்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக, இந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 18 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துள்ளன. மேலும், இதே காலகட்டத்தில் மலேசியாவின் பங்குச் சந்தையும் சுமார் 3.1 சதவிகிதம் என்ற அளவில் வீழ்ந்துள்ளது. 


சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகளில், உலகம் முழுவதும் பதின்வயது பெண் குழந்தைகளுக்கு ஆணுறை கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் சுமார் 6 மில்லியன் தேவையற்ற பிரசவங்களும், ஆபத்தான முறையில் செய்யப்படும் 2 மில்லியன் கருக்கலைப்புகளும் ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.