ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்ப அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார் . இந்த முக்கியமான கடல் வழியை பாதுகாக்க மற்ற நாடுகள் தங்கள் கப்பல்களை அனுப்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், அதில் இரண்டு பெரிய நாடுகள் ட்ரம்பிற்கு ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்துள்ளன. இதனால், அடுத்ததாக அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பர்ப்பு ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப்பிற்கு நோ சொன்ன சீனா, பிரிட்டன்
உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட போர் பதற்றங்களால், இப்பகுதியில் பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளன. இந்த பகுதியை பாதுகாப்பதற்கான ட்ரம்பின் வேண்டுகோளை தொடர்ந்து, சீனாவும் பிரிட்டனும் அதற்கு பதிலளித்துள்ளன. இருப்பினும், இரு நாடுகளும் இப்பகுதிக்கு தங்கள் போர்க்கப்பல்களை அனுப்புமா என்பதை தெளிவுபடுத்தவில்லை. அதனால், அது கிட்டத்தட்ட கோரிக்கை நிராகரிப்பு என்றே சொல்லலாம்.
சீனாவின் பதில் என்ன.?
ட்ரம்ப்பின் கோரிக்கை குறித்து அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சீனா உடனடியாக விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவரவே விரும்புவதாகவும், அனைத்து தரப்பினரும் நிலையான மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும், பதற்றங்களை குறைத்து, அமைதியை மீட்டெடுக்க மத்திய கிழக்கு நாடுகளுடனான தனது உறவுகளை சீனா வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் கூறியது என்ன.?
இதேபோல், இவ்விவகாரம் குறித்து பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இங்கிலாந்து அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து, பிராந்தியத்தில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு விருப்பங்களைப் பற்றி விவாதித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். எனினும், அப்பகுதிக்கு கப்பல்களை அனுப்புவது குறித்த உறுதியான பதில் எதையும் கூறவில்லை.
டிரம்ப் என்ன சொன்னார்.?
முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து பாதுகாப்பாக வைத்திருக்க போர்க்கப்பல்களை அனுப்புவதில் பல நாடுகள் அமெரிக்காவுடன் இணையும் என்று ட்ரம்ப் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் இணையக்கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பிறகு, ஈரானின் ராணுவத் திறன்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். இருப்பினும், இந்த கடல் பாதை இன்னும் ட்ரோன்கள், கண்ணிவெடிகள் அல்லது குறுகிய தூர ஏவுகணைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்றும் அவர் கூறினார். மேலும், மற்றொரு பதிவில், முழு மத்திய கிழக்கையும் கைப்பற்றி, இஸ்ரேலை அழிக்கும் ஈரானின் திட்டம் இப்போது முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது சீனா, பிரிட்டன் என இரண்டு மிகப்பெரிய நாடுகள் ட்ரம்ப்பின் கோரிக்கையை ஏற்காத நிலையில், மற்ற நாடுகளின் பதில் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. இதனால், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலைமை அப்படியே தான் உள்ளது.
