Canada Shooting: போர்க்களமாக மாறிய பள்ளி வளாகம்; துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மப் பெண் உட்பட 10 பேர் பலி
கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ளர் ரிட்ஜ் நகரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், தாக்குதல் நடத்தியவர் உட்பட 10 பேர் பலியாகினர்.

கனடாவின் டம்ளர் ரிட்ஜ் நகரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 25 பேர் காயமடைந்தனர். காவல்துறையினர் தகவலின்படி, நேற்று பிற்பகலில், டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் குறித்து டம்ளர் ரிட்ஜ் ஆர்.சி.எம்.பி.க்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், காவலர்கள் அடங்கிய குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
சந்தேகிக்கப்படும் நபரும் பலி
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றபோது, சந்தேக நபர் ஒருவர் இறந்து கிடந்ததாகவும், ஆரம்ப கட்ட தகவலின்படி, அந்த நபர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மற்றொருவரும் ஈடுபட்டாரா என்பது குறித்தும் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர். சந்தேக நபரைத் தவிர, பள்ளிக்குள் மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த 25 பேருக்கு சிகிச்சை - காவல்துறை கூறுவது என்ன.?
மேலும், இந்த சம்பவத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். டம்ளர் ரிட்ஜ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மொபைல் போன்களுக்கு அவசர எச்சரிக்கை அனுப்பப்பட்டது. சந்தேக நபர் "பழுப்பு நிற முடி கொண்ட பெண்“ என்று கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிற்குள் இருக்கவும், அந்த பகுதியை தவிர்க்கவும் காவல்துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அதோடு, உள்ளூர் தலைவர்கள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், மாகாண அரசாங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தனர். பீஸ் ரிவர் சவுத் எம்எல்ஏ லாரி நியூஃபெல்ட், தனது தொகுதி மக்களுக்கு ஆதரவளிக்க விக்டோரியாவிலிருந்து உடனடியாகத் திரும்புவதாகக் கூறினார். சூழ்நிலையைச் சமாளிக்க, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கூடுதல் காவல் படைகளும் அனுப்பப்பட்டன.
இச்சம்பவம் குறித்து பேசியுள்ள வடக்கு மாவட்ட தலைமை கண்காணிப்பாளர் கென் ஃபிலாய்ட், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட சுமார் 100 பேர் பள்ளியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகக் கூறினார். துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் என்பதை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் பதிவு
இச்சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, "இன்று BC, டம்ளர் ரிட்ஜில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் நான் மிகவும் மனமுடைந்து போயுள்ளேன். இந்த கொடூரமான வன்முறைச் செயல்களால் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது பிரார்த்தனைகளும் ஆழ்ந்த இரங்கல்களும்“ என தெரிவித்துள்ளார். மேலும், “சக குடிமக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரை பணயம் வைத்த முதல் வீரர்களின் தைரியம் மற்றும் தன்னலமற்ற தன்மைக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
I am devastated by today’s horrific shootings in Tumbler Ridge, B.C. My prayers and deepest condolences are with the families and friends who have lost loved ones to these horrific acts of violence.
— Mark Carney (@MarkJCarney) February 11, 2026
I join Canadians in grieving with those whose lives have been changed…
கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு கனடாவில் நடந்த மிக மோசமான சம்பவம் இதுவாகும். நோவா ஸ்கோடியாவில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் 13 பேரை கொன்று, தீ வைத்து எரித்து மேலும் 9 பேரைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.























