வங்கதேசத்தில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என, அந்நாட்டு தேர்தல் ஆணையர் நஸீருதீன் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வங்கதேசம்  பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பின், அந்நாட்டில் நடக்கும் 13-வது பொதுத் தேர்தல் இது.

Continues below advertisement

ஷேக் ஹசீனாவின் சரிவு

வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதை அந்நாட்டின் முக்கிய கட்சிகள் புறக்கணித்தன. இதனால், ஷேக் ஹசீனா வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றார். ஆனால், சில மாதங்களில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அதைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, அது தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026 பிப்ரவரி மாதம் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இது குறித்து அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீனுடன், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியிருந்தனர்.

Continues below advertisement

தேர்தலை அறிவித்த வங்கதேச தேர்தல் ஆணையர்

அதைத் தொடர்ந்து, அடுத்தாண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என, அந்நாட்டு தேர்தல் ஆணையர் நஸீருதீன் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்துள்ளார்.

மொத்தம் 300 தொகுதிகளை கொண்ட வங்கதேச நாடாளுமன்ற தேர்தலுக்கு, டிசம்பர் 12-ம் தேதி முதல் டிசம்பர் 29-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு மீதான பரிசீலனை டிசம்பர் 29-ம் தேதி முதல் 2026 ஜனவரி 4-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனையின் முடிவுகளை எதிர்த்து ஜனவரி 11-ம் தேதி வரை முறையிடலாம் எனவும், ஜனவரி 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அவை மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் மீதான முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வெளிநாடு வாழ் வங்கதேசத்தினர் நாளை முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு, முகமது யூனுஸ் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அக்கட்சியால் தேர்தலில் போட்டியிட முடியாது. இதையடுத்து, மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இடையே தான் இந்த தேர்தலில் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் ஆணையம் உறுதியாக உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் நஸீருதீன் தெரிவித்துள்ளார்.  தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதன் மூலம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயக தேர்தல் நடைமுறையை நோக்கிய பயணத்தை வங்கதேசம் முறையாகத் தொடங்கியுள்ளது.