வங்கதேசத்தின் ஷரியத்பூர் மாவட்டத்தில், மற்றொரு இந்து நபர், ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 வாரங்களில் 4-வது இந்த நபர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மேலும் ஒரு இந்து நபர் தீ வைத்து எரிப்பு
வங்கதேசத்தில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது ஷரியத்பூர் மாவட்டத்தில் மற்றொரு இந்து நபர் மீது கொடூர தாக்குதல் நடத்திய ஒரு கும்பல், அவரை தீ வைத்து எரித்துள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர், 50 வயதான கோகான் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மருந்தகம் ஒன்றை நடத்திவரும் கோகான் தாஸ், நேற்று இரவு தனது கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு குழு அவரை சுற்றி வளைத்து, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளதும், அதைத் தொடர்ந்து அவர் மீது அந்த கும்பல் தீயும் வைத்துள்ளது. இந்த கொடூரமான சூழலில், அருகில் இருந்த குளம் ஒன்றில் குதித்து கோகான் தாஸ் உயிர் தப்பியுள்ளது, விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தில் தீவிரமடைந்த வன்முறைகள்
வங்கதேசத்தில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, அங்கு வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய, இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தீபு சந்திர ஃதாஸ் என்ற இந்து இளைஞர் ஒருவரை, ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதோடு, அவரது உடலை இழுத்துவந்து சாலையில் பேட்ட அந்த கும்பல், தீ வைத்து எரித்தது.
இச்சம்பவம் உலகளவில் பெரும் பேசுபொருளான நிலையில், இதைத் தொடர்ந்து ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்ற 29 வயது இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியதில், அவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதோடு அடங்காத வன்முறை கும்பலால், ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவந்த பிஜேந்திர பிஸ்வாஸ்(42) என்ற இந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
வங்கதேசத்தில் கடந்த 15 நாட்களில், இந்து நபர் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும். இச்சம்பவம், வங்க தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவது குறித்த பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது. இதனிடையே, வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு, மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.