கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கனடாவில் படிக்க விண்ணப்பித்த இந்திய மாணவர்களில், கிட்டத்தட்ட 75 சதவீதத்தினரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், கனடாவில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதற்கு காரணம் என்ன.? பார்க்கலாம்.

Continues below advertisement

இந்திய மாணவர்களை புறக்கணிக்கிறதா கனடா.?

ஒரு காலத்தில், இந்திய மாணவர்கள் படிக்க விரும்பிய சிறந்த இடமாக கனடா இருந்தது. ஆனால், தற்போது அந்த ஈர்ப்பு குறைந்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், கனடாவும் சர்வதேச மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கனடாவில் படிக்க விண்ணப்பித்த இந்திய மாணவர்களில், கிட்டத்தட்ட 75 சதவீதத்தினரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கனடா அசுசு, தற்காலிக இடப்பெயர்வை தடுப்பதற்கும், மாணவர் விசா மோசடியை நிவர்த்தி செய்யும் விதமாகவும், 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில், தொடர்ச்சியாக 2-வது ஆண்டாக வழங்கப்பட்ட சர்வதேச மாணவர் அனுமதிகளின் எண்ணிக்கையை குறைத்தது.

Continues below advertisement

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய விண்ணப்பதாரர்கள்

கடந்த காலங்களைவிட, தற்போதுதான் இந்திய விண்ணப்பதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விண்ணப்பித்த இந்திய விண்ணப்பதாரர்களில், 75 சதவீதம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2023-ம் ஆண்டை ஒப்பிடும்போது, அந்த ஆண்டு 32 சதவீதம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கடந்த 2 மாதங்களிலும், ஒட்டுமொத்த படிப்பு அனுமதி விண்ணப்பங்களில் சுமார் 40 சதவீதத்தை நிராகரித்துள்ளது கனடா அரசு.

பல ஆண்டுகளாக கனடாவின் சர்வதேச மாணவர்களுக்கான முதன்மை ஆதாரமாக இந்தியா இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த நிராகரிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம், அனுமதி வழங்குவது முற்றிலும் கனடாவின் அதிகாரித்திற்கு உட்பட்டது என தெரிவித்துள்ளது.

இருந்தாலும், உலகில் கிடைக்கும் சிறந்த தரமான மாணவர்களில் சிலர், இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்த தாங்கள் விரும்புவதாகவும், கனேடிய நிறுவனங்கள் இந்திய மாணவர்களின் திறமை மற்றும் கல்வித் திறமையால் பெரிதும் பயனடைந்துள்ளதாகவும் தூதரகம் கூறியுள்ளது.

நிராகரிப்பு ஏன்.?

கடந்த 2023-ல், வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் படிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அனுமதி கடிதங்களில், சமார் 1,550 ஏற்பு கடிதங்கள் போலியானவை என கனேடிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் பல இந்தியாவிலிருந்து வந்தவை என்பதை குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், புதிய மேம்படுத்தப்பட்ட சரிபார்ப்பு அமைப்பு, கடந்த ஆண்டு வந்த விண்ணப்பங்களில், 14,000-த்திற்கும் மேற்பட்ட ஏற்பு கடிதங்கள் மோசடியாக உள்ளதை கண்டறிந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களுக்கான சரிபார்ப்பு செயல்முறையை, கனடா தற்போது கடுமையாக்கியுள்ளது.

விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது

இத்தகைய சூழலில், கனடாவில் படிப்பதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, படிப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் 20,900-ஆக இருந்த நிலையில், 2025 ஆகஸ்ட் மாதத்தில், அந்த எண்ணிக்கை 4,515-ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.