அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபராக கிறிஸ்டினா ஃபெர்ணாண்டஸ் பதவி வகித்து வருகிறார்.  இவர் ஏற்கெனவே 2007 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் அர்ஜென்டினாவின் அதிபராக பதவி வகித்துள்ளார். இவர் மீது கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஊழல் செய்தாக புகார் உள்ளது. இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் கிறிஸ்டினாவை பொது இடத்தில் வைத்து ஒருவர் கொலை செய்ய முயற்சி செய்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் துணை அதிபர் கிறிஸ்டினா பொதுவெளியில் கூடியிருந்த மக்களிடம் கை கொடுக்க செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது மக்கள் சிலர் கை கொடுக்கும் போது ஒருவர் திடீரென்று துப்பாக்கியை கிறிஸ்டினாவின் முகத்தில் சுட முயற்சி செய்துள்ளார். 


 






அப்போது அந்த துப்பாக்கி சரியாக இயங்கவில்லை. இதன்காரணமாக கிறிஸ்டினா உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை துணை அதிபரின் பாதுகாவலர்கள் விரட்டி பிடித்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணையில் இந்த நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 35வயது நபர் என்பது தெரியவந்துள்ளது. 


இந்தச் சம்பவம் தொடர்பாக அர்ஜென்டினா அதிபர் அல்பர்டோ ஃபெர்ணாண்டஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “துணை அதிபர் மீது நடைபெற்ற இந்தத் தாக்குதல் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று நடைபெற்ற ஜனநாயகத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் சட்டத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.