ட்ரம்ப் ஆரம்பித்து வைத்த வர்த்தகப் போரால், இந்தியாவிற்கு ஒரு நன்மை விளைந்துள்ளது. ஆம், ஆப்பிள் நிறுவனம் மூலம் அந்த ஜாக்பாட் இந்தியாவுக்கு அடித்துள்ளது. முழு விவரம் என்ன.? தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்...
ஏற்கனவே ஐ ஃபோன் உற்பத்தியில் கலக்கிவரும் ஆப்பிளின் இந்திய தொழிற்சாலை
செல்ஃபோன் என்றாலே முதன்மையாக இருப்பது ஐ ஃபோன் தான். தரத்திலும் சரி, விலையிலும் சரி, டாப் அது தான். உலக அளவில் மக்களிடம் அதிக மவுசு கொண்டது ஐ ஃபோன் என்றே கூறலாம். ஒரு முறை ஐ ஃபோனை பயன்படுத்தும் வாடிக்கையாளர், அதன் பிறகு வேறு ஃபேன்களுக்கு மாறுவதில்லை. இந்த அளவிற்கு மக்களை கவர்ந்துள்ள ஐ ஃபோனை தயாரித்துவரும் ஆப்பிள் நிறுவனம், தனது பெரும்பாலான உற்பத்திக்கு சீனாவையே நம்பியுள்ளது.
ஆனாலும், இந்தியாவில் ஐ ஃபோன்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பெங்களூரு தொழிற்சாலை, விரைவில் செயல்படத் தொடங்கும் என்றும், அதிகபட்சமாக சுமார் 2 கோடி ஐ ஃபோன்களை தயாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சுமார் 70 சதவீத ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ ஃபோன் விநியோகச் சங்கிலிதான் பங்களிப்பை கொடுத்துவருகிறது. இது ஒட்டுமொத்த வெளிநாட்டு ஏற்றுமதியில் 50 சதவீதத்திற்கு நெருக்கமாக உள்ளது.
கடந்த ஆண்டின் இதே நேரத்தில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஐ ஃபோன்களின் எண்ணிக்கையை விட, இந்த ஆண்டு அதே நேரத்தில் 40 சதவீதம் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்தியாவில் கடந்த ஆண்டில், இதுவரை இல்லாத அளவாக, 22 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஐ ஃபோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உலக அளவில், மொத்த ஐ ஃபோன் உற்பத்தியில், இந்தியா 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகிறது. அதே நேரம், இந்திய சந்தைகளிலும ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி ஸ்திரமாக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவிலிருந்து சாதனை அளவாக, 30 லட்சத்திற்கும் அதிகமான ஐ ஃபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உற்பத்தியை இந்தியாவுக்கு கொண்டுவரும் ஆப்பிள் நிறுவனம்
இப்படி, ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் ஆதரவை இந்தியா வழங்கி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் இந்தியாவிற்கு கொண்டுவர, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம், அதன் பெரும்பாலான உற்பத்திக்கு தற்போது சீனாவையே நம்பியுள்ளது. இந்நேரத்தில், அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் முற்றியுள்ள நிலையில், உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுமாறு ஆப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதனால், சீனாவை நம்பியிருப்பதை குறைக்கும் வகையில், இந்தியாவிலேயே மொத்த ஐ ஃபோன் உற்பத்தியையும் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியா அதற்கு எந்த அளவிற்கு தயாராகிறது, சீனாவுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை எப்படி முடிகிறது என்பதை பொறுத்துதான், இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவில் மொத்த ஐ ஃபோனும் உற்பத்தி செய்யப்பட்டால், அது இந்தியாவிற்கு ஜாக்பாட் அடித்த மாதிரிதான். ஐ ஃபோன்களின் விலை குறைவதுடன், ஏராளமான வேலை வாய்ப்புகளும் உருவாகும். இதெல்லாம் நடக்குமா.? பொறுத்திருந்து பார்ப்போம்.