அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கி வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடன் நட்பு பாராட்டு அரபு நாடுகள் மீதும், அங்குள்ள அமெரிக்க ராணுவ நிலைகள், தூதரகங்கள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், 14 அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

“உடனடியாக வெளியேறுங்கள்“ - அமெரிக்கர்களுக்கு உத்தரவு

இது குறித்து, அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான உதவி செயலாளர் மோரா நாம்தார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுவது என குறிப்பிட்டு, அமெரிக்கர்களுக்கு எதிராக கடுமையான பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதால், கிடைக்கக் கூடிய வணிக போக்குவரத்தை பயன்படுத்தி, கீழே  குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறறீர்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், வணிக வழிகளில் புறப்பட ஏற்பாடு செய்ய வெளியுறவுத்துறை உதவி தேவைப்படும் அமெரிக்கர்கள், +1-202-501-4444 (வெளிநாட்டிலிருந்து) and +1-888-407-4747 (அமெரிக்கா மற்றும் கனடா) என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அருகில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது தூதரகத்தின் பாதுகாப்பு புதுப்பிப்புகளை பெற http:/step.state.gov/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த பட்டியலின்படி, பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல் (மேற்கு கரை, காசா), ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு அமீரகம், யேமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்கோ ரூபியோ வெளியிட்ட வீடியோ

இதேபோல், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் தனியாக ஒரு வீடியோவை வெளியிட்டள்ளார். அதில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தான் எங்களின் முன்னுரிமை என தெரிவித்துள்ளார்.

இவர்களது இந்த பதிவின் மூலம், மத்திய கிழக்கில் என்ன நடக்கப் போகிறதோ என்ற பதற்றம் எல்லோர் மத்தியிலும் தொற்றியுள்ளது. ஈரானும் பின்வாங்காததால், இந்த போர் மேலும் பெரிதாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.