Israel Wildfire: இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் பயங்கர காட்டுத் தீ:
ஜெருசலேமின் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத் தீ காரணமாக, ஆயிரக்கணக்கான குடிமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ஜெருசலேமிலிருந்து டெல் அவிவ் பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான, முதல் சாலையோரம் தீ கட்டுக்கடங்காமல் பல அடி உயரத்திற்கு கரும்புகையை கக்கிக் கொண்டு கொளுந்து விட்டு எரிகிறது. பொதுமக்கள் தங்களது கார்களை கூட சாலையிலேயே விட்டுவிட்டு, உயிர்களை காப்பாற்றிக் கொள்ள தலைதெறிக்க ஓடியுள்ளார். இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லாவிட்டாலும், 13 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுக்கடங்காத தீ:
இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 160-க்கும் அதிகமான மீட்பு மற்றும் தீயணைப்புக் குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் ஆகாயத்தில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நாட்டின் ராணுவமும் இந்த பணியில் களமிறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கடும் வெயில் மற்றும் வேகமாக வீசும் வறண்ட காற்று காரணமாக, தீ கட்டுக்கடுங்காமல் அதிவேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீ விபத்து இது என, தீயணைப்புத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ பரவியுள்ள, இனி பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
3000 ஏக்கர் காலி
தீயை கட்டுப்படுத்தும் பணிக்கு நீண்ட நேரம் ஆகலாம். தற்போதைய சூழலில் தீ எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. வறண்ட காற்றின் வேகம் தற்போது இருப்பதை காட்டிலும் வேகமாக அதிகரித்து மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் வீசக்கூடும், இதனால், காட்டுத்தீயின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் தீயணைப்பு படையினர் எச்சரித்துள்ளனர். இஸ்ரேலிய விமானப்படை 18,000 லிட்டர் வரை தீயணைப்புப் பொருட்களை வைத்திருக்கக்கூடிய C-130J சூப்பர் ஹெர்குலஸ் கனரக போக்குவரத்து விமானங்களை தீயணைப்பு படையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் தற்போது வரை கிட்டத்தட்ட 3,000 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளுக்கு கோரிக்கை
ஜெருசலேமில் நடைபெற இருந்த சுதந்திர தின கொண்டாட்டம், காட்டுத் தீ காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க சர்வதேச உதவ வேண்டுமென்றும் இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது. இதனை ஏற்று, காட்டுத்தீயை அணைக்க உதவுவதற்காக உக்ரைன் ஒரு விமானத்தை அனுப்புவதாகக் கூறியது. மேலும், ஸ்பெயின், ஃப்ரான்ஸ், ருமேனியா, குரோஷியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் விமானங்களை அனுப்புவதற்கு உறுதியளித்துள்ளன.