மத்திய கிழக்கு போர் பதற்றத்திற்க மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உடல்நிலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நெதன்யாகு, 2024 டிசம்பர் 29-ம் தேதி ப்ரோஸ்டேட் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில், 1 செ.மீ அளவுள்ள சந்தேகத்திற்கிடமான சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகு தனது வருடாந்திர மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டதாகத் தெரிவித்து, நேற்று இரவு ஒரு பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். போர் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது அந்த அறிக்கை வெளியிடப்படக்கூடாது என்பதற்காகவும், இஸ்ரேலுக்கு எதிராக மேலும் பொய்ப் பிரசாரத்தை பரப்புவதற்கு ஈரானிய பயங்கரவாத ஆட்சிக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகவும், அந்த அறிக்கையை வெளியிடுவதை இரண்டு மாதங்கள் தாமதப்படுத்த அவர் கோரியிருந்ததாக கூறியுள்ளார். அவரது பதிவில் என்ன கூறியிருக்கிறார் என்பதை இப்போது பார்க்கலாம்.
பெஞ்சமின் நெதன்யாகுவின் பதிவு
நெதன்யாகுவின் எக்ஸ் தள பதிவல், "நான் உங்களுடன் மூன்று விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். இரண்டாவதாக, நான் மிகச் சிறந்த உடல் நிலையில் இருக்கிறேன். எனது ப்ரோஸ்டேட் சுரப்பியில் ஒரு சிறிய மருத்துவப் பிரச்னை இருந்தது. அது முழுமையாகக் குணப்படுத்தப்பட்டுவிட்டது. நல்லவேளையாக, அந்தப் பிரச்னை இப்போது நீங்கிவிட்டது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, வீங்கிய ப்ரோஸ்டேட் சுரப்பிக்காக எனக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அன்று முதல், நான் வழக்கமான மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறேன். கடந்த மாதம், ஒரு சிறிய தழும்பு கண்டறியப்பட்டது. இந்தப் புற்றுநோய் அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. இதற்கு சிகிச்சை தேவையில்லை. தேவையானது எல்லாம் கண்காணிப்பு மட்டுமே. நீங்கள் இதனுடன் வாழலாம். பலர் அவ்வாறுதான் செய்கிறார்கள்." என்று கூறியுள்ளார்.
மேலும், "சிகிச்சை பெற்று, இந்த பிரச்னையை அதன் வேரிலிருந்து களையுங்கள். உங்களுக்கு என்னை ஏற்கெனவே தெரியும். எந்தவொரு ஆபத்தையும் நான் உணர்ந்தால், அதை உடனடியாக கையாள விரும்புகிறேன். இது தேசிய மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொருந்தும்," என்றும் நெதன்யாகு கூறியுள்ளார்.
அதோடு, "நான் அதையே செய்தேன். நான் ஒரு சிறப்பு சிகிச்சையை மேற்கொண்டேன். அது அந்தப் பிரச்னையை முற்றிலுமாகக் குணப்படுத்தி, எந்த தடயமும் இல்லாமல் ஆக்கியது. நான் சில சிறிய சிகிச்சைகளை மேற்கொண்டேன், ஒரு புத்தகத்தைப் படித்தேன், என் வேலையை தொடர்ந்தேன். அந்த தழும்பு முற்றிலுமாக மறைந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி, நான் இந்த துன்பத்தை வென்றேன். ஜெருசலேமில் உள்ள ஹதாசா மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும் அங்குள்ள சிறந்த மருத்துவக் குழுக்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்“ என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
குடிமக்களுக்கு வேண்டுகோள்
தொடர்ந்து, “இஸ்ரேல் குடிமக்களாகிய உங்களிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உள்ளது: உங்கள் உடல்நலத்தை பேணுங்கள். பரிசோதனை செய்துகொள்ளுங்கள், உங்கள் மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றுங்கள். இங்கிருந்து, ஷப்பாத்தின் முந்தைய நாள் இரவில், உடலிலும் ஆன்மாவிலும் காயப்பட்டிருக்கும் நம் மக்களின் அமைதிக்காக நான் ஜெபிக்கிறேன். உங்கள் சார்பாக, அவர்களுக்கு என் அன்பான அரவணைப்பையும், அவர்கள் முழுமையாகக் குணமடைய வாழ்த்துகளையும் அனுப்புகிறேன். ஷப்பாத் ஷாலோம்." என்று நெதன்யாகு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
முன்னதாக, நெதன்யாகு மரணமடைந்திருக்கலாம் என்று வதந்திகள் பரவி வந்தன. அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக சில ஏஐ வீடியோக்களை இஸ்ரேல் வெளியிட்டதால், அவரது இருப்பு குறித்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால், தனது இந்த பதிவின் மூலம் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
