ஹார்முஸ் நெருக்கடிக்கு மத்தியில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கான விலக்கை அமெரிக்கா நீட்டித்துள்ளது. இந்த விலக்கை அமெரிக்கா நீட்டிக்காது என்று நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறிய இரண்டு நாட்களில், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்கா இந்த விலக்கை மேலும் சுமார் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்க கருவூலத் துறை, நேற்று இரவு தாமதமாக ஒரு உரிமத்தை வழங்கியது. இதன் மூலம், ரஷ்ய எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், மே 16-ம் தேதி வரை பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. இதுபோன்ற விலக்கை நீட்டிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று ஸ்காட் பெசென்ட் பகிரங்கமாக குறிப்பிட்ட 2 நாட்களுக்கு பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எத்தனை நாட்கள் அவகாசம்.?
ஏப்ரல் 11 அன்று காலாவதியான முந்தைய 30 நாள் விலக்குக்கு பின், இந்த புதிய அனுமதி அமலுக்கு வரும். இது குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் தொடர்ச்சியான கொள்முதல்களை அனுமதித்தாலும், ஈரான், கியூபா மற்றும் வட கொரியா சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை வெளிப்படையாக விலக்குகிறது. இதனால், இந்த விலக்கின் கீழ் எந்த நாடும் ஈரான் , கியூபா மற்றும் வட கொரியாவிடமிருந்து எண்ணெயை வாங்க முடியாது.
ஸ்காட் பெசன்ட் சொன்னது என்ன.?
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஸ்காட் பெசன்ட், "ரஷ்ய மற்றும் ஈரானிய எண்ணெய்க்கான பொது உரிமத்தை நாங்கள் புதுப்பிக்க மாட்டோம். இந்த எண்ணெய் மார்ச் 11-ம் தேதிக்கு முன்பு கப்பல்களில் ஏற்றப்பட்டது. எனவே, அது முழுமையாக பயன்படுத்தப்பட்டுவிட்டது," என்று கூறியுள்ளார். மேலும், மார்ச் 20-ம் தேதி அமெரிக்க கருவூலத் துறையால் வழங்கப்பட்ட ஈரானிய விலக்கு, சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உலகச் சந்தைகளை அடைய அனுமதித்தது என்றும், போரின்போது, எரிசக்தி விநியோகத்தில் இருந்த அழுத்தத்தை குறைக்க உதவியது என்றும் அவர் முன்னதாக கூறியிருந்தார்.
விலக்கு குறித்து ரஷ்யா கூறுவது என்ன.?
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபரின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரியேவ், முதல் விலக்கு 100 மில்லியன் பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை விடுவிக்கும் என்றும், இது ஏறக்குறைய ஒரு நாள் உலகளாவிய உற்பத்திக்கு சமம் என்றும் கூறியுள்ளார்.
இந்த தடைகள் தளர்வு தற்காலிகமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கக்கூடும் என்றாலும், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை பகுதியளவு மூடியது, பெட்ரோலிய விலைகளில் கடுமையான உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. போருக்கு முன்பு, உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20 சதவிதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
