அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இன்று ஈரானுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நேற்று போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியது. இந்நிலையில், ட்ரம்ப்பின் புதிய பதிவால், போர்நிறுத்தம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ட்ரம்ப் என்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.? பார்க்கலாம்.
“இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல் நடக்கும்“
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறிது நேரத்திற்கு முன் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏற்கனவே பெருமளவில் பலவீனமடைந்த எதிரியை, கொன்று குவித்து அழிப்பதற்குத் தேவையான மற்றும் பொருத்தமான அனைத்து அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள், மற்றும் ராணுவ வீரர்கள், கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் பிறவற்றுடன், எட்டப்பட்ட உண்மையான ஒப்பந்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் வரை, ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலைநிறுத்தப்பட்டிருப்பார்கள்.“ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஏதேனும் ஒரு காரணத்தால் அது நிறைவேற்றப்படாவிட்டால், (அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு), அப்போது, இதுவரை யாரும் கண்டிராத அளவுக்கு பெரியதாகவும், சிறந்ததாகவும், வலிமையானதாகவும் "துப்பாக்கிச் சூடு" தொடங்கும். இதற்கு மாறான அனைத்து போலியான சொல்லாடல்களையும் மீறி, வெகு காலத்திற்கு முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டது - அணு ஆயுதங்கள் இல்லை, மேலும் ஹோர்முஸ் நீரிணை திறந்தும் பாதுகாப்பாகவும் இருக்கும். இதற்கிடையில், நமது மாபெரும் ராணுவம் ஆயுதங்களை தயார் செய்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது; உண்மையில், தனது அடுத்த வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது!“ என்று தனது பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனால், சற்று நிம்மதியடைந்திருந்த உலக நாடுகளுக்கு மீண்டும் கலக்கம் எற்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த பதிவிற்கு காரணம் என்ன.?
அமெரிக்கா உடனான இரண்டு வார போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதற்கு பதிலடி தரும் விதமாக, ஹார்முஸ் நீர்வழிப்பாதையை மூடிவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதோடு, வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் மீதான தாக்குதல் இடம்பெறவில்லை எனவும், ஹார்முஸை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் அமெரிக்கா சொன்னாலும், ஈரான் அதை கேட்பதாக இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் இந்த ஜலசந்தி ஒரு முக்கிய அழுத்தப் புள்ளியாக உருவெடுத்துள்ளது. இதன் மீதான தனது கட்டுப்பாட்டை ஒரு பேச்சுவார்த்தைக்கான சக்தியாக ஈரான் பயன்படுத்தி வருகிறது.
இது மட்டுமல்லாமல், ஈரான் 10 நிபந்தனைகளை விதித்ததாக கூறப்பட்டதும் பொய் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அது குறித்த பதிவையும் அவர் இன்று போட்டுள்ளார். அதில், போச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நாடுகளை அவமதிப்பு செய்யும் விதமாக சில ஊடகங்கள் போலி செய்தியை வெளியிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இத்தகைய காரணங்களாலேயே ட்ரம்ப் மீண்டும் ஒரு எச்சரிக்கை பதிவை போட்டுள்ளார். இதனால், அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலை எழுந்துள்ளது. ஒருவழியாக முடிவுக்கு வருகிறது என்று பார்த்தால், இன்னும் மோசமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.
