வெனிசுலாவில் அதிரடி தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரை பிடித்த நிலையில், அங்குள்ள கோடிக்கணக்கான பேரல்கள் கச்சா எண்ணெய் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது அமெரிக்கா. அதோடு, அந்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தை தானே நிர்வகிக்கும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில், வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அனுமதி அளிக்க தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. அது எதற்காக.? பார்ப்போம்.
வெனிசுலா கச்சா எண்ணெய் இருப்பை கைப்பற்றிய அமெரிக்கா
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஆகியோரை கைது செய்து, தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்று சிறையில் அடைத்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அவர்கள் மீது அரிக்காவில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, வெனிசுலாவில் உள்ள கச்சா எண்ணெயை தங்கள் கைவசம் எடுத்துள்ள அமெரிக்கா, அதை உலக சந்தைகளில் விற்கவும், அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மறுசீரமைக்கவும் முடிவு செய்துள்ளது.
வெனிசுலா எண்ணெய் வருவாயை பாதுகாக்கும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது தேசிய அவசரநிலையை அறிவித்து, அமெரிக்க கணக்குகளில் வைத்திருக்கும் வெனிசுலா எண்ணெய் வருவாயை பாதுகாக்கும், வெனிசுலா எண்ணெய் எதிர்கால விற்பனையை கட்டுப்படுத்த மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த நிர்வாக உத்தரவு, "அமெரிக்க கருவூலக் கணக்குகளில் வைத்திருக்கும் வெனிசுலா எண்ணெய் வருவாயை பறிமுதல் அல்லது நீதித்துறை செயல்முறையிலிருந்து பாதுகாக்க" ஒரு தேசிய அவசரநிலையை அறிவிக்கிறது என்று வெள்ளை மாளிகை உண்மைத் தாள் தெரிவித்துள்ளது.
வெனிசுலா எண்ணெய் துறையில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்காக, வாஷிங்டனில், எக்ஸான், கோனோகோ, செவ்ரான் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளை டிரம்ப் சந்தித்த அதே நாளில் இந்த உத்தரவு கையெழுத்தானது.
கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அனுமதி - பின்னணி என்ன.?
இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வெனிசுலாவின் கச்சா எண்ணெயை விற்க அனுமதி அளிக்கப்பம் என அமெரிக்கா தெரிவித்த நிலையில், அதை வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.
வெனிசுலாவின் கச்சா எண்ணெயை வாங்க, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுமதி அளிக்க தயாராக உள்ளோம் என அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விற்பனை அமெரிக்காவின் வழிகாட்டுதலின்படியே நடக்கும் என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். ஆனால், இந்தியா அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இந்த சூழலில், வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்க அனுமதி அளித்தால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்ற நோக்கத்தில் தான், அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுப்பதாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் எண்ணப்படி இந்தியா அதை செய்யுமா.? பொறுத்திருந்து பார்ப்போம்.
