ஆம், தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி 56 நாட்களில் அவர் இந்தப் பதவிக்கு வந்துள்ளார்.
Tarique Rahman: 17 ஆண்டுகால வனவாசம்.. 56 நாட்களில் பிரதமர்- யார் இந்த தாரிக் ரஹ்மான்? மோடிக்கு வந்த சிக்கல்..
Bangladesh PM Tarique Rahman: கடந்த 17 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்து இருந்த தாரிக் ரஹ்மான், நாடு திரும்பிய 56 நாட்களில் வங்கதேசத்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Bangladesh PM Tarique Rahman: தாரிக் ரஹ்மான் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் நிகழ்ந்த மாற்றம்..
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக இருக்க, 17 ஆண்டுகள் நாட்டிலேயே இல்லாத தாரிக் ரஹ்மான் 56 நாளில் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பழிக்குப் பழி கதை எப்படித் தொடங்கியது? தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மோடி செல்வாரா? இந்தியா-வங்கதேசம் உறவில் அடுத்து என்ன நடக்கும்? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வங்கதேசத்தை இரண்டாக்கிய குடும்ப மோதல்..
இந்த மோதல் இவர்களுக்கு இடையில் தொடங்கியது அல்ல, இவர்களது பெற்றோருக்கு இடையிலேயே தொடங்கிவிட்டது. ஷேக் ஹசீனா, வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள். தாரிக் ரஹ்மான், முன்னாள் அதிபரும் ராணுவத் தளபதியுமான ஜியாவுர் ரஹ்மானின் மகன். 1975-ல் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜியாவுர் ரஹ்மான் மீது ஹசீனாவுக்குத் தீராத கோபம் இருந்தது. இதுவே இந்தப் பகையின் விதை.
தப்பியோடிய தாரிக் ரஹ்மான்
இந்தப் பகை 2004-ம் ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. அப்போது தாரிக் ரஹ்மானின் தாய் கலிதா ஜியா பிரதமராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஷேக் ஹசீனா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஹசீனா உயிர் தப்பினார், ஆனால் 24 பேர் கொல்லப்பட்டனர் என சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டது தாரிக் ரஹ்மான் தான் என்று ஹசீனா தரப்பு குற்றம் சாட்டியது.
2009-ல் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தவுடன், தாரிக் ரஹ்மானை குறிவைக்கத் தொடங்கினார். ஊழல் வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் என தாரிக் ரஹ்மான் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பாய்ந்தன. 2008-லேயே தாரிக் லண்டனுக்குத் தப்பிச் சென்றார். அவர் இல்லாத நேரத்திலேயே அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தாயார் கலிதா ஜியாவும் சிறையில் அடைக்கப்பட்டார். தாரிக் ரஹ்மானின் தம்பி அராபத் ரஹ்மான் வெளிநாட்டிலேயே உயிரிழந்தார். தனது குடும்பத்தையே ஹசீனா சிதைத்துவிட்டதாக தாரிக் ரஹ்மான் கருதினார்.
17 ஆண்டுகள் வனவாசம்.. 56 நாட்களில் பிரதமர்..
வங்கதேசத்தில் 15 ஆண்டுகள் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஷேக் ஹசீனா, 2024-ல் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தால் ஒரே நாளில் நாட்டை விட்டு ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான், ஹசீனாவுக்கு எதிராக அதே சட்ட ரீதியான ஆயுதங்களை கையில் எடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாத கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வரும் பிப்ரவரி 17, செவ்வாய்க்கிழமை அன்று தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். அதாவது நாடுட் திரும்பிய 56 நாட்களில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அவரது BNP கட்சி முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. "இந்தியா எங்களுடன் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு" என தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்கதேசம் உறவு வலுவடையுமா?
பிப்ரவரி 17-ம் தேதி மும்பையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி இடையிலான மிக முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஒரே மேடையைப் பகிர்வதில் உள்ள சிக்கல்களையும் இந்தியா ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே தாரிக் ரஹ்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த மோடி, "ஜனநாயக மற்றும் உள்ளடக்கிய வங்கதேசத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.
ஷேக் ஹசினாவால் மோடிக்கு சிக்கல்?
தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாத கட்சி தனது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனாவை இந்தியா உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. 2024 போராட்டத்தின் போது நடந்த வங்கதேச நீதிமன்றம் வழக்கு விசாரணையில், ஷேக் ஹசீனாவுக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி அவரை எங்களிடம் ஒப்படையுங்கள்" என்று BNP தலைவர் சலாவுதீன் அகமது அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல தசாப்தங்களாக இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருந்த ஹசீனாவை, அவர் மரண தண்டனையை எதிர்கொள்ளும் போது ஒப்படைப்பது இந்தியாவுக்கு தார்மீக ரீதியாக கடினமான ஒன்று. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே 'நாடு கடத்தல் ஒப்பந்தம் இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காகத் தஞ்சம் புகுந்தவர்களை ஒப்படைப்பதில் சில விதிவிலக்குகள் உள்ளன. தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசுடன் சுமுகமான உறவுடன் இருக்க வேண்டுமானால், ஹசீனா விவகாரத்தில் இந்தியா ஒரு முடிவெடுத்தே ஆக வேண்டும்.
இந்தியாவை விட்டு வெளியேறும் ஹசினா?
இந்தியா அவரைப் பாதுகாக்க முடிவு செய்தால், அவர் நீண்ட காலம் டெல்லியிலேயே தங்கியிருக்கலாம். ஆனால் இது புதிய வங்கதேச அரசுடன் மோதலை உருவாக்கும். ஐக்கிய அரபு அமீரகம் அல்லது வேறு ஏதேனும் ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் அடைக்கலம் தேடிச் செல்ல வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறாது. சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் விசாரணை நடத்தப்பட்டால், அதில் பங்கேற்கத் தயார் என ஹசீனா தரப்பு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
தாரிக் ரஹ்மான் ஆட்சிக்கு வந்தவுடன், ஹசீனாவைத் திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்குப் பெரும் அழுத்தம் தருவார் என்பது உறுதி. அதே சமயம், பிரதமர் மோடி தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளும் இந்தப் பிரச்சினையை ஒரு சமரசம் மூலம் தீர்க்க முயற்சி செய்யலாம் என நம்பப்படுகிறது.
Frequently Asked Questions
தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமராகி உள்ளாரா?
தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பாரா?
தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மோடி உட்பட அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா இதில் ஆலோசித்து வருகிறது.
ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும் என வங்கதேசத்தில் கோரிக்கை உள்ளதா?
ஆம், தாரிக் ரஹ்மானின் கட்சி ஷேக் ஹசீனாவை இந்தியா உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அவர் வங்கதேச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைத்தால் என்ன நடக்கும்?
ஷேக் ஹசீனாவை ஒப்படைப்பது இந்தியாவுக்கு தார்மீக ரீதியாக கடினமானது. அவர் தஞ்சம் புகுந்திருந்தால், நாடு கடத்தல் ஒப்பந்தத்தில் சில விதிவிலக்குகள் உண்டு.
























