ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஹெரத் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொழுகையிலிருந்த பல்வேறு நபர்கள் படுகாயம் அடைந்தனர். அத்துடன் தற்போது வரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. 


இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மதபோதகர் முஜிப் அல் ரஹ்மான் மற்றும் அவருடைய சகோதாரர் உள்ளிட்ட 13 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பலர் குண்டு வெடிப்பிற்கு அந்த மசூதியிலிருந்து ஓடும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


 







இந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி தொழுகையின் போது குண்டை வெடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. 


முன்னதாக மசார்-இ-ஷெரீப்பில் கடந்த மே மாதம் தனித்தனி மினி பேருந்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 13 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் வடக்கு ஆஃப்கானிஸ்தானில் இருந்த மசார்-இ-ஷெரீப்பிலுள்ள மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர்.


ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆட்சியில் இருந்து வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் தொடர்ந்து அங்கு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


ஆப்கானிஸ்தானில்  பெண் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளுக்கு செல்ல தலிபான் அரசு தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபுலில் இருந்து மேற்படிப்புக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளுக்கு சென்று படிப்பதற்கு ஆப்கானில் உள்ள பெண்களுக்கு அனுதிக்க அளிக்கப்படாது என்பதே தலிபானின் முடிவு என்று ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


2018- ஆம் ஆண்டு 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்களின் படை பலத்தினால், அமெரிக்க தங்களது படைகளையும், பணத்தையும் மேலும் இழக்க வேண்டாம் என்று முடிவெடுத்து,  பிப்ரவரி, 29, 2020-இல் தலிபான்களுடன் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையிம் அமெரிக்க திரும்ப பெற்றது. இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. ஓராண்டுகளாக துயரத்தின் பிடியில் ஆப்கன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை, மறுபுறம் தலிபான்களின் கடுமையான விதிகள். இதற்கு மத்தியில் ஆப்கன் மக்களின் வாழ்வு போராட்டமாக மாறிவிட்டது. மேலும், அங்கு வாழும் பெண்கள் கார் ஓட்ட அனுமதில் மறுக்கப்பட்டது, பொதுவெளியில் பெண்கள் தங்கள் முகம் தெரியும்படி செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு விதிமுறைகளை தலிபான் அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.