பிலிப்பைன்ஸில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அதற்கு 72 பேர் பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலச்சரிவில் எத்தனை பேர் புதையுண்டனர் என்பதற்கான புள்ளிவிவரம் ஏதுமில்லை.


பிலிப்பைன்ஸ் நாட்டின் மகுயிண்டனாவ் மாகாணத்தில் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வியாழன் இரவு தொடங்கிய மழை வெள்ளி முழுவதுமே வெளுத்து வாங்கியது. இதனாலேயே வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் நகுவிப் சினாரிம்போ தெரிவித்துள்ளார். இதுதவிர அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக கிழக்கு மாகாணங்களில் 5 பேர் இறந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 7000 பேர் வரை பத்திரமான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


பிலிப்பைன்ஸில் ஆண்டுக்கு 20 புயல்கள் ஏற்படுகின்றன. இதில் சமீப ஆண்டுகளில் வீசிய மோசமான புயலாக ‘ராய்’ கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் வீசிய ராய் புயலில் 208 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸில் கடந்த 2013-ஆம் ஆண்டு வீசிய புயலில் 6,000 பேர் வரை பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பசிபிக் ரிங் ஆஃப் பயர் பகுதியில் அமைந்துள்ளது. அதனாலேயே பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கமும் ஏற்படுகிறது. நிலநடுக்கம், மழை, வெள்ளம் என இயற்கை பேரிடர் நிறைந்த பகுதியாக பிலிப்பைன்ஸ் இருக்கிறது. 


காலநிலை மாற்றம் காரணமாகவே உலகம் முழுவதும் கடும் வறட்சி, காலம் தவறிய மழை, அதி கனமழை, வெள்ளம் ஆகியன ஏற்படுகின்றன. அதற்கு பிலிப்பைன்ஸும் விதிவிலக்கல்ல. அண்மையில் அண்டார்டிகாவில் நியூசிலாந்து நாட்டின் காலநிலை மாற்ற ஆராய்ச்சி தளத்தை அந்நாட்டுப் பிரதமர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், நாம் இந்தப் பகுதிகளை பாதுகாக்க வேண்டும். காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற நெருக்கடிகளை சமாளிப்பதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். காலநிலை மாற்ற விளைவை கண்காணிப்பதில் நமது விஞ்ஞானிகள் வகிக்கும் பங்கு, நமது நிகழ்காலத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது என்று கூறினார்.


உலகத்திற்கு சவால்விடும் காலநிலை மாற்றம்:


வளரும் நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவது இந்த பருவநிலை மாற்றம்தான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளில் பேரிடர்களினால் மனித உயிர் இழப்புகள் பற்றிய ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி நமது நாட்டில் ஏற்பட்ட வறட்சியால் மட்டும் சுமார் 42,00,000 பேரும் கொள்ளை நோய் பரவல் மூலம் சுமார் 45,00,000 பேரும், சுறாவளி புயல்களால் 1,40,000 பேரும், பேரலைகளின் தாக்கத்தால் 17,000 பேரும் வெள்ளப் பெருக்கால் 52,000 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று வெளியிட்டிருக்கிறது.


உலக வெப்பமயமாதலின் தாக்கத்தை உணர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவில் அதன் தாக்கத்தை உணரமுடிகிறது. உதாரணமாக கொல்கத்தாவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட ஒரு தீவு கடலில் மூழ்கியிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டிய கடற்பகுதியில் இச்சாமதி ஆறும், ராய்மங்கல் ஆறும் கலக்குமிடத்தில் மூர் என்ற தீவு இருந்தது. இது 3 கி.மீ. நீளமும் 3.5 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த தீவு யாருக்கு சொந்தம் என்று 1980ல் இந்தியா‍வங்க தேசம் இடையே பிரச்சனை எழுந்து பின்பு இந்தியாவிற்கே சொந்தம் என்று கூறப்பட்ட அந்தத் தீவு, பருவநிலை மாற்றத்தால் கடல்நீர்மட்டம் உயர்ந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.


உலகில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படும் கார்பன்டை ஆக்ஸைடு அளவில் இந்தியாவின் பங்களிப்பு 4 சதவீதம் தான் என்றாலும் தட்பவெப்பநிலையை பாதுகாக்க தன் பங்களிப்பைச் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து பசுமை இல்லா வாயுக்களின் அளவை கட்டுப்படுத்தவேண்டும். வரும் 2020 ஆண்டிற்குள்ளாக குறைந்த அளவு 2 டிகிரி செல்சியஸ் அளவாவது வெப்பத்தை கட்டுப்படுத்தவில்லையென்றால் இந்த உலகம் பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்நோக்க வேண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே நமது பூமித் தாயை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். பசுமை இல்லா வாயுக்களை குறைப்போம். வளமான எதிர்காலத்தை பெறுவோம்.