சுவிஸ் நாட்டை சேர்ந்த IQAir என்ற நிறுவனம் இந்த ஆண்டிற்கான உலகக் காற்றுத் தர அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகச் சர்வதேச காற்றின் தரம் சற்றே மேம்பட்டு வந்த சூழலில், இந்த ஆண்டு காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை அடைந்து உள்ளது. காற்றில் இருக்கும் கொடிய மற்றும் நுண்ணிய PM2.5 மாசு மாசு ஒரு கன மீட்டருக்கு 58.1 மைக்ரோகிராமாக இருக்கிறது. இது உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்றின் தர வழிகாட்டுதல்களை விட 10 மடங்கு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த நகரமுமே உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர அளவை எட்டவில்லை. குறிப்பாக வட இந்தியாவில் காற்றின் தரம் மிக மோசமாகவே உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. டெல்லி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக பெயர் பெற்று முதலிடத்தில் உள்ளது. அங்குக் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் காற்று மாசு கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்னும் அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது அறிக்கை. டெல்லியில் காற்று மாசின் அளவு உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வரம்புகளை விடக் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக ராஜஸ்தானின் பிவாடி உள்ளது. அதைத் தொடர்ந்து காசியாபாத் 2ஆவது இடத்தில் உள்ளது. முதல் 15 மாசுபட்ட நகரங்களில் 10 நகரங்கள் இந்தியாவில் உள்ளவை. அதிலும் பெரும்பாலும் நகரங்கள் தேசிய தலைநகரைச் சுற்றியே உள்ளன என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் தகவல். டாப் 100 மாசடைந்த நகரங்களில் 63 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்று ரிப்போர்ட் கூறுகிறது. அதில் பாதிக்கும் மேற்பட்ட நகரங்கள் ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ளன. டெல்லி மற்றும் லக்னோவில் வசிப்பவர்கள் உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளைப் பூர்த்திசெய்தால், அவர்களின் ஆயுட்காலம் ஏறக்குறைய 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் என காற்றின் தர 'வாழ்க்கைக் குறியீடு' அறிவுரை வழங்குகிறது. வாகனத்தில் இருந்து வெளிவரும் காற்று உமிழ்வுகள், அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலை கழிவுகள், சமையலுக்கு மற்றும் கட்டுமானத் துறை ஆகியவை காற்று மாசு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளன. கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக டெல்லியைச் சுற்றியுள்ள பல பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. காற்று மாசு காரணமாகவே நாட்டில் ஆண்டுக்கு சுமார் $150 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படுகிறதாம். காற்று மாசு காரணமாக ஒவ்வொரு நிமிடமும் மூன்று பேர் வரை உயிரிழப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டில் சென்னையைத் தவிர மற்ற 6 மெட்ரோ நகரங்களிலும் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தரவுகளிலும் டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதையே காட்டுகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் டெல்லியில் 168 நாட்கள் காற்றின் தரம் மோசமானதாக இருந்துள்ளது. அதேபோல கொல்கத்தாவில் 74 நாட்களும் மும்பை 39 நாட்களும் காற்றின் தரம் மோசமானதாக இருந்துள்ளது. அதேபோல இந்தியாவிலேயே சுத்தமான காற்று தமிழ்நாட்டில் உள்ள அரியலூரில் உள்ளது என்றாலும், அதுவும் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான அளவை விட மூன்று மடங்கு அதிகமாகவே உள்ளது.
IQAir வெளியிட்ட இந்த அறிக்கையில் நெல் அறுவடைக்குப் பிறகு பயிர்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு தொடர்பாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் இந்த புகை காரணமாக மட்டுமே 45 சதவீதம் வரை காற்று மாசு ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகக் குளிர் காலங்களில் டெல்லிக்கு அருகிலுள்ள விவசாய நிலங்களில் தீ வைத்து எரிப்பது டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதேநேரம் இந்த ஆண்டு சீனாவின் காற்றின் தரம் மேம்பட்டு உள்ளதாக IQAir அறிக்கை குறிப்பிடுகிறது. சீனாவில் கடந்த 5 ஆண்டுகளாகக் காற்றின் தரம் தொடர்ந்து மேம்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் காற்று மாசை குறைத்ததில் இருந்தே சீனாவால் காற்று மாசை குறைக்க முடிந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.