வங்கதேசத்தில் ரசாயன கண்டெய்னரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 49 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வங்கதேச நாட்டிலுள்ள மிக முக்கிய துறைமுக நகரமான சிட்டகாங்கில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பிஎம் ரசாயன கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொள்கலனில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட பல ரசாயனங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு  இந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 


அப்போது கண்டெய்னர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதற மற்ற கண்டெய்னர்களுக்கும் தீ மளமளவென பரவியது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு 19 வாகனங்களுடன் சென்ற தீயணைப்பு படையினர் கிட்டதட்ட 19 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், மீட்பு படையினர், தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் இதுவரை தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உட்பட 49 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் 450க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே பிஎம் ரசாயன கிடங்கு இயக்குநர் முஜிபுர் ரஹ்மான் கூறும் போது, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவியை செய்வோம்,அதற்கான செலவை எங்கள் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். 


இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்துள்ளதோடு 3 நாட்களுக்கு விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தவிட்டுள்ளார்.  அதேசமயம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் டாகாவும், காயமடைந்தவர்களுக்கு 224 டாகாவும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வங்கதேச வர்த்தகத்தின் 90 சதவிகிதம் சிட்டகாங் துறைமுகம் வழியாகவே நடைபெறுகிறது என்பதால் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி கடலில் ரசாயனங்கள் பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் விதிகளை பின்பற்றாததால் அடிக்கடி இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண