ஒரு ஊருக்கே செல்லப்பிள்ளையாக இருந்த வாத்து ஒன்றை சில விஷமம் பிடித்த சிறுவர்கள் வெட்டி சமைத்து தின்றுவிட ஊரே கொந்தளித்துவிட்டது.


அட இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே என்று கேட்கிறீர்களா?! ஆமாம் புதுத் கதை தான். 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மான்லியஸ் என்ற புறநகர்ப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் ஃபாயி என்ற பெண் வாத்து வசித்து வந்தது. பத்தாண்டுகளுக்கு மேல் அந்த வாத்து அங்கே வசித்து வந்தது. அதற்கு 4 குழந்தைகள் கூட இருந்தன. இந்நிலையில்  திடீரென அந்த வாத்து மாயமானது. 
கூடவே 4 குட்டிகளும் மாயமாகின. அதில் இரண்டு அருகிலிருந்த கடையில் கண்டுபிடிக்கப்பட்டன. அது ஒரு இறைச்சிக் கடை.


இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:


நாங்கள் வாத்து மாயமான வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினோம். அப்போதுதான் ஒரு இறைச்சிக் கடை மீது சந்தேகம் வந்தது. அங்கிருந்த பதின் பருவ இளைஞர்களிடம் விசாரித்தோம். விசாரணையில் அவர்கள் வாத்தையும் அதன் குட்டிகளையும் திருடியதை ஒப்புக் கொண்டனர் . அவர்கள் கூறுகையில், “நள்ளிரவு நேரத்தில் குளத்தில் இருந்து வாத்தை திருடினோம். அதை அங்கேயே கொன்று விட்டோம். பின் எங்கள் அத்தை வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டோம். நாங்கள் அது மிகப்பெரிய வாத்து என்பதாலேயே கொலை செய்ய நினைத்தோம்” என்று குற்றத்தை ஒப்புக் கொண்டனர். மூவரும் 16 முதல் 18 வயதே நிரம்பியவர்களாவர்” எனத் தெரிவித்தனர்.


எஞ்சியுள்ள இரண்டு வாத்துகளையும் ஓர் உயிரியல் ஆர்வலர் தன் பராமரிப்பில் எடுத்துக் கொண்டார். இதனால் மான்லியஸ் என்ற அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்த கிராமத்தின் அடையாளமே குளமும் அதிலிருந்த வாத்தும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.