வரலாறு என்பது அமானுஷ்யங்களால் நிரம்பியது. சமீபத்தில் இதனை நிரூபிக்கும் விதமாக, இஸ்ரேலில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த கல்லறை ஒன்றில் அதனைத் திறப்போருக்கு ரத்தத்தில் எழுதப்பட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பெய்ட் ஷெ அரிம் பகுதியில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட குகை ஒன்றின் பண்டைய கால கல்லறைத் தோட்டத்தில் இந்த `சபிக்கப்பட்ட’ கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 65 ஆண்டுகளில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியம் கொண்ட தலமாகக் கருதப்படும் இந்தப் பகுதியில் கிடைத்த முதல் கல்லறையாகவும் இது கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டாலும் சமீபத்தில் இந்தக் குகைக்குள் பல்வேறு சிறிய குகைகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுத் தலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டவர் மதம் மாறியவர் என்பதால் இந்தக் கல்லறை கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாகவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளின் மூலமாக, இதனைத் திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதில், `இதனைத் திறப்பவர் யாராக இருந்தாலும், அவரின் மீது யாகோவ் ஹேகெர் சாபம் விழும்.. எனவே இதனை யாரும் திறக்கக் கூடாது.. வயது 60 ஆண்டுகள்’ என இந்தக் கல்லறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாகோவ் ஹேகர் என்பது யூத மதத்திற்கு மாறியவர் என்று பொருள் தருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த எச்சரிக்கைக் குறிப்பை எழுதியது யார் என்ற தகவல்களும் கிடைக்கவில்லை.
ஹைஃபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் ஏடி எர்லிச் கல்லறைகளை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார். `ஒரே கல்லறையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், பிறர் யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம்’ எனக் கூறுகிறார் ஏடி எர்லிச். மேலும், அவர் இந்த எழுத்துகள் கிறித்துவ மதத்தின் பலம் வாய்ந்த காலமான இறுதி ரோமானியர்கள், பைஜாண்டின் காலத்தின் தோற்றம் போன்ற சூழல்களின் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
`தொடக்க கால பைஜாண்டின் காலம் அல்லது ரோமானியர்களின் இறுதிக் காலத்தில் கிறித்துவ மதம் பலப்படுத்தப்பட்ட சூழலில் இந்த எழுத்துகள் எழுதப்பட்டிருக்கலாம். மேலும், இங்குள்ள மக்கள் யூத மதத்தைத் தேர்ந்தெடுத்தற்கான ஆதாரமாக இது இருக்கிறது.. தற்போது இந்தக் கல்லறையைப் பாதுகாத்து வைப்பதற்காக தற்காலிகமாக குகையை மூடியுள்ளோம்.. தற்போது எந்த தொல்பொருள் அகழ்வாய்வும் மேற்கொள்ளப்படவில்லை’ எனவும் ஏடி எர்லிச் தேரிவித்துள்ளார்.
சாபம் விடுக்கும் இந்தக் கல்லறையின் எழுத்து பொறிந்த கல் தற்போது இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும், இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.