இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து  அங்கு மக்கள் கலவரம் ஏற்பட்டது.இதனை அடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தற்போது இருக்கிறார்.

 

இந்நிலையில் சிங்கப்பூரில் தங்கி இருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவை அந்நாட்டை விட்டு வெளியேற்றமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.அதேபோல் போர் குற்றம் ,ஒரு நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்கியது தொடர்பாக அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அண்மையில் சிங்கப்பூரில் தங்கி இருக்க 15 நாட்கள் மட்டுமே  கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் ,அவரை வெளியேறுமாறும் அந்நாட்டு அரசு அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருந்தது.

 

தற்போது சிங்கப்பூரில் தங்கி இருக்கும் கோத்தபாய ராஜபக்ச தனது விசா காலத்தை நீட்டித்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.ஆகவே இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தொடர்ந்தும் தங்கியிருக்க தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


 

 சிங்கப்பூரில் கோத்தபாய உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கப்பட்ட குறுகிய கால பயணம் அனுமதியானது மேலும் 14 நாட்களுக்கு  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் இலங்கை அதிபர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் ஒரு முன்னாள் அதிபருக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறதோ அவை அனைத்தும் கோத்தபாய ராஜபக்ச இலங்கை வந்தால் வழங்கப்படும் எனவும் அவர்  கூறியிருந்தார்.இதேவேளை‌ முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் சிரேஷ்ட அதிகாரி யஸ்மின் சூகா, சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் 63 பக்கத்திலான அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார். இலங்கையின் முன்னாள் அதிபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாக யஸ்மின் சூகா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கோத்தாபய ஒரு அதிபருக்குரிய சிறப்புரிமைகளை இழந்துள்ளதாகவும், இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.