ஆழ்கடலில் சிக்கிய தாய், உடன் பிறந்தவர்கள்.. 4 மணி நேரம் நீச்சலடித்து காப்பாற்றிய சிறுவன்!
ஆஸ்திரேலியாவின் பெர்த்தைச் சேர்ந்த ஆஸ்டின் அப்பெல்பீ என்ற 13 வயது சிறுவன் தனது தாய் மற்றும் தம்பி, தங்கைகளுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளான்.

ஆஸ்திரேலியாவில் கடலின் ஆழ்த்தில் மாட்டிக்கொண்ட தனது தாய் மற்றும் தம்பி, தங்கையைக் காப்பாற்ற 4 மணி நேரம் தொடர் நீச்சலில் ஈடுபட்ட சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த்தைச் சேர்ந்த ஆஸ்டின் அப்பெல்பீ என்ற 13 வயது சிறுவன் தனது தாய் மற்றும் இரண்டு தம்பிகளுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளான். கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 4 பேரும் கடலில் துடுப்பு படகை பயன்படுத்தி நேரத்தை செலவழித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பலத்த காற்று வீசியதோடு மட்டுமல்லாமல் பெரிய அலைகள் எழுந்துள்ளது. இதில் தாய் ஜோன், சகோதரர் பியூ, சகோதரி கிரேஸ் ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்தில் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால் சிறுவன் ஆஸ்டின் அப்பெல்பீ தனது துடுப்பு படகை எடுத்துக் கொண்டு கடல் கடும் கொந்தளிப்புடன் இருந்த நிலையில் கரையை நோக்கி சென்றான். கரையை அடைய 4 மணி நேரம் எடுத்துக் கொண்ட நிலையில் தனது முயற்சியின் மூலம் தாய், சகோதரர், சகோதரிகளை காப்பாற்றியுள்ளான். அந்த சிறுவன் முதல் இரண்டு மணி நேரம் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்து நீதிய நிலையில், அது அவனது வேகத்தைக் குறைத்ததால் அடுத்த 2 மணி நேரம் அதனை கழட்டி விட்டு நீந்தியுள்ளான்.
இதற்கிடையில் கரையை அடைந்த ஆஸ்டின் சோர்வு காரணமாக மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த அவன் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கிடந்த செல்போனை எடுத்து அதன்மூலம் மீட்புக்குழுவினரை அழைத்துள்ளான். இதனையடுத்து ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் உதவியுடன் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் இரவு 8.30 மணிக்கு தாய், தங்கை, தம்பியை கடலில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் மீட்பு படையினர் மீட்டனர். அவர்கள் ஒரு துடுப்பு படகில் உயிருக்கு போராடி கிடந்தனர்.
3 பேரையும் ஒரு கப்பலில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்பு பணி தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் கடலுக்குள் சிக்கிய 3 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் உதவியது ஆஸ்டினின் தளராத முயற்சி தான். முன் அனுபவம் இல்லாமை மற்றும் உடல் சோர்வு ஆகியவை இருந்தபோதும் அம்மா, சகோதரன், சகோதரிகளை மீட்க வேண்டும் என்ற முனைப்பு எப்படிப்பட்ட சவால்களையும் அசால்ட்டாக செய்ய வைக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
கடலில் சிக்கிய 3 பேரும் லைஃப் ஜாக்கெட்டுகள் அணிந்திருந்தது நல்லதாக போய் விட்டது. 13 வயது சிறுவனின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவனது உறுதியும் தைரியமும் இறுதியில் 3 பேரின் உயிரைப் பாதுகாத்துள்ளது. இந்த நிலையில் அந்த சிறுவன் சூப்பர் ஹுயூமன் என அழைக்கப்பட்டு வருகிறான்.






















