சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்களிடம் போட்டோ எடுப்பதாக அத்துமீறிய 13 சிறுவர்களை எகிப்து காவல்துறை கைது செய்துள்ளது
சுற்றுலாதளங்கள் கொண்ட நாடுகளில் எகிப்து ஒரு முக்கியமான நாடாகும். எகிப்து நாட்டுக்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த ரம்ஜான் கொண்டாட்டத்தின் போது அதிக சுற்றுலா பயணிகள் எகிப்து வந்தனர். இந்நிலையில் கிசா பிரமீட் பகுதிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளம்பெண்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் 13 பேர் போட்டோ எடுப்பதாக அவர்களை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தனர். 13 முதல் 15 வயதிலான 13 சிறுவர்கள் அவர்களை பின் தொடர்வதும், அவர்களிடம் வார்த்தைகளால் அத்துமீறியும் உள்ளனர். அவர்களை விட்டு அப்பெண்கள் தப்பித்துச் செல்ல வேகமாக நடந்தும் கூட விடாமல் சிறுவர்கள் துரத்திச் செல்கின்றனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டனர். இந்நிலையில் வீடியோவில் இருந்த 13 சிறுவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வீடியோ எடுத்த நபர், இது பாலியல் அத்துமீறல். இது எகிப்து அரசுக்கு தெரிய வேண்டும். தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார். பாலியல் தொந்தரவுக்கு உள்ளான வெளிநாட்டு பெண்கள் புகார் ஏதும் தெரிவிக்காத நிலையில் வீடியோ வைரலானதன் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. மேலும், இனி சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எகிப்து தொடர்ந்து சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சமீப காலங்களில், எகிப்து நாட்டில் பெருமளவிலான அகழ்வாராய்ச்சிகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மன்னர்களின் கல்லறைகள், சிலைகள், கல்லறைகள், மம்மிகள் எனப் பல்வேறு பழங்காலப் பொருள்கள் எகிப்து நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்து கலாச்சாரத்தில் மக்களின் தலைவர்கள் இறந்த பிறகு அவர்கள் புதைக்கப்படும் போது, அந்த உடல்கள் பதப்படுத்தப்பட்டன. இந்த நடைமுறையின் மூலம் `மம்மி’ என்று பதப்படுத்தப்பட்ட உடல்கள் அழைக்கப்பட்டன. மேலும், பதப்படுத்தப்பட்ட இந்த உடல்கள் இறந்த பிறகான வாழ்க்கைக்கு எடுத்துச் செல்வதற்கு என அவர்களுக்கு இந்த உஷப்தி பொம்மைகள், கேனோபிக் பானைகள், தாயத்துகள், பாசி மணிகள் ஆகியவை போடப்பட்டு, கல்லறைகள் மூடப்படும். இப்படி எகிப்தை சுற்றி மம்மிகள், பிரமீடுகள் என புது அனுபவம் கிடைக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் அந்நாட்டு படையெடுக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்